×

ஈஷா அறக்கட்டளை எரிவாயு மயானம் விவகாரம் உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் மத்தியஸ்தம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஈஷா அறக்கட்டளை எரிவாயு மயான விவகாரத்தில் உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட நவீன எரிவாயு மயானம் செயல்படுவதற்கு எதிராக சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்ப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘குடியிருப்பு அருகில் சுடுகாடு ஏற்படுத்தக்கூடாது என்று விதி இருக்கிறது. ஆனால் ஈஷா மையத்தின் சுடுகாடு என்பது தங்கள் வீட்டின் அருகிலும், தனது கிணற்றுக்கு மிக அருகிலும் உள்ளது. எனவே அந்த சுடுகாடு இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து ஈஷா யோகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சம்பந்தப்பட்ட மனுதாரரின் நிலத்தை வாங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

ஏற்கனவே அவரது நிலத்தில் ஒரு சிறு பகுதியை ஈஷா மையம் வாங்கி இருக்கின்றது. அதன் அடிப்படையில் முழுவதுமாக அவருடைய அந்த பகுதியை வாங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் உரிய இழப்பீட்டையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில், ‘‘ஈஷா யோகா மையம் மற்றும் மனுதாரர்கள் என இருவரும் இந்த விஷயத்தை சுமுகமாக தங்களுக்குள்ளாகவே பேசி முடித்துக்கொள்ள வேண்டும். மனுதாரருடைய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி அந்த நிலத்தை ஈஷா மையம் வாங்க முடியுமா?.

குறிப்பாக மனுதாரர் வேறு ஒரு இடத்தில் வீடு வாங்கும் அளவிற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக இருதரப்பும் அமர்ந்து பேசலாம். இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு இழப்பீடு உள்ளிட்டவற்றை சுமூகமாக பேசி முடிவெடுப்பதற்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திரனை மத்தியஸ்தராக நியமிக்கிறோம். எனவே இரு தரப்பு வழக்கறிஞர்களும் நாளை அவரிடம் சென்று உச்ச நீதிமன்ற உத்தரவை தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Isha Foundation ,Supreme Court ,New Delhi ,Subramanian ,Poluvampatti, Ikkarai, Coimbatore district… ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...