குமரியில் நெல் கொள்முதல் பாதிப்பு: வெளிமார்க்கெட்டில் விற்கும் விவசாயிகள்

 

நாகர்கோவில்: கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கலில் உற்பத்தி விழுக்காடு குறிப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இரு போக நெல் விவசாயம் நடந்து வருகிறது. ஜூன் மாதம் தொடங்கும் முதல் போக நெல் விவசாயம் கன்னிப் பூ எனவும், செப்டம்பர் மாதம் தொடங்கும் நெல் விவசாயம் கும்ப பூ எனவும் விவசாயிகள் அழைக்கின்றனர். கன்னிப் பூ பருவத்தின் போது அம்பை 16 ரக நெல்லும், கும்ப பூ பருவத்தின் போது பொன்மணி ரக நெல்லும் பிரதாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

திருப்பதிசாரம் 3, 5 ரக நெல் மாவட்டத்தில் விளைவிக்கப்பட்டு வருகிறது. கன்னிப்பூவின் போது திருப்பதிசாரம் 5 ரக நெல்லும், கும்பபூவின் போது திருப்பதிசாரம் 3 ரக நெல்லும் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது குமரி மாவட்டத்தில் நெல் விவசாயம் சுருங்கி போய் உள்ளது. கடந்த காலத்தில் லட்சகணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த வயல் பரப்பளவு தற்போது சுமார் 15 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது. நெல்லிற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாய பரப்பளவு குறைவதற்கு காரணம் ஆகும். ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லிற்கு விலை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு கெடுபிடி விதிப்பதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் சிறமடம், திடல், கடுக்கரை, திட்டுவிளை, பறக்கை உள்பட 10 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. குமரியில் இயற்கையாகவே காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஆனால் 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது. அதற்கு அதிகமாக ஈரப்பதம் இருக்கும் நெல்லை கொள்முதல் செய்வது இல்லை. இதனால் வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலைக்கு விவசாயிகள் நெல்லை கொடுத்து வருகின்றனர். தற்போது குமரி மாவட்டத்தில் கும்ப பூ அறுவடை நடக்கிறது. நெல்லை வியாபாரிகளிடம் கொடுக்கும் போது ஒரு கோட்டை ரூ.1650க்கு கொள்முதல் ெசய்யப்பட்டு வருகிறது.

இதனால் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் இருந்து வெளி மார்க்கெட்டில் ஒரு கோட்டைக்கு ரூ.522குறைவாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது, கிராம நிர்வாக அதிகாரியிடம் விவசாயிகள் அடங்கல் பெற்று செல்ல வேண்டும். அந்த அடங்கலில் கிராம நிர்வாக அதிகாரிகள் வயலில் கிடைத்துள்ள மகசூல் எவ்வளவு என்ற விழுக்காட்டில் குறிக்கின்றனர். இதனால் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது மகசூல் கிடைத்துள்ளதை கொண்டு நேரடியாக நெல்கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: தமிழக அரசு விவசாயிகளுக்கு நல்லவிலை கிடைக்க வேண்டும் என்று நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அங்கு ஒரு ஏக்கர் வயலில் இருந்து 2400 கிலோ நெல் மட்டுமே கொள்முதல் செய்வார்கள். கூடுதலாக மகசூல் கிடைத்தால், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொடுக்க முடியாது. குமரி மாவட்டத்தில் தற்போது திறந்துள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்வதை தவிர்த்து வருகின்றனர். விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும், விவசாய பொருளின் மகசூல் அதிகரிப்பு, குறைவு என நிர்ணயம் செவ்வது புள்ளியல் துறை ஆகும்.

ஆனால் குமரி மாவட்டத்தில் தற்போது கிராம நிர்வாக அதிகாரிகள் அடங்கல் கேட்டு செல்லும் விவசாயிகளிடம் வயலில் இத்தனை சதவீதம் உற்பத்தி ஆகியுள்ளது என அடங்கலில் குறித்து கொடுக்கின்றனர். குறிப்பாக ஒருவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் 50 விழுக்காடு நெல் கிடைத்துள்ளது எனகிராமநிர்வாக அதிகாரி சான்றிதழ் கொடுக்கும்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1200 கிலோ நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வார்கள். மீதமுள்ள நெல்லை வெளியே எடுத்துவர வேண்டியது தான். இதுபோல் ஒருவருக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தால், ஒரேநாளில் அறுவடை செய்து நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நேரடி நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நெல் நேரடியாக கிராம நிர்வாக அதிகாரிகள் உற்பத்தி விழுக்காடு குறித்து கொடுக்க கூடாது. புள்ளியல்துறை மட்டுமே கொடுக்க வேண்டும். நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பல்வேறு கெடுபிடியால், விவசாயிகள் நேரடியாக வெளிமார்க்கெட்டில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது நேரடி நெல்கொள்முதல் அதிகாரிகள், ஊழியர்கள் வெளி வியாபாரிகளுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது. விவசாயிகளின் நலனில் மாவட்ட நிர்வாகம் அக்கறை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விற்பனைக்கு தயாராகும் வைக்கோல் கட்டு
குமரி மாவட்டத்தில் கும்ப பூ அறுவடை பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. நெல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும், வெளி மார்க்கெட்டுகளிலும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் வைக்கோல் கட்டு விலை குறைந்துள்ளது. அறுவடை தொடங்கிய போது ஒரு கட்டு வைக்கோல் ரூ.160 வரை விற்பனையானது.

தற்போது விலை குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புத்தேரி பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல்களை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் வைக்கோல்களை கட்டி தயாராக வைத்துள்ளனர். தற்போது குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் வைக்கோல் கட்டுவிலை உயர வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: