முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது

 

சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. 1925 டிசம்பர் 26 அன்று, தாமிரபரணி ஆற்றங்கரை அணைத்த ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர் ஆர்.நல்லகண்ணு. வெறும் 18 வயதிலேயே ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி, தீவிர விடுதலைப் போரில் குதித்தார். சுதந்திரத்திற்காக மட்டுமல்ல ஏழை விவசாய தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், தாமிரபரணி மணல் கொள்ளைக்கு எதிராகவும், ஈழத்தமிழர் உரிமைகளுக்காகவும் இறுதிமூச்சு வரை களத்தில் நின்றவர்.

நேற்று மாலையிலிருந்தே சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். வயோதிகர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான செஞ்சட்டைத் தொண்டர்கள், ‘வீரவணக்கம்! வீரவணக்கம்!’ என்று கரகோஷம் எழுப்பி தங்கள் தலைவருக்கு கண்ணீர் மரியாதை செலுத்தினர். இன்று காலை நடிகர் சூர்யா, கார்த்தி, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வீரவணக்கம் என முழங்கி தோழர் நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராயர் நகரில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரிக்கு நல்லகண்ணு உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ ஆய்வுக்காக நல்லகண்ணு உடல் தானமாக வழங்கப்பட்டது

Related Stories: