×

தண்ணீர் வழிபாடும் சடங்குகளும்

தீர்த்த மகிமையும் சிவன் கோயில்களும்

பௌத்தர்கள் நல்ல நீர் நிலைகளின் அருகே மடம் அல்லது சங்கம் அமைத்தனர். அங்கே மனிதருக்கும் விலங்கு மற்றும் பறவைகளுக்கும் மருத்துவ சிகிச்சை செய்ய மருத்துவமனைகள் கட்டினர். கடவுள் எதிர்ப்புச் சமயமாக இருந்த நிலை மாறியதால் பவுத்த மடங்கள் காலப்போக்கில் விகாரை எனப்படும் பவுத்த கோயில்கள் ஆயின. வழிபாட்டு முறைகள் தோன்றின.

திருமுழுக்கும் திருமஞ்சனமும்

திருக்கோயிலுக்கு நடத்தப்படும் திருமுழுக்கு அல்லது கும்பாபிஷேகத்தின்போது புண்ணிய நதிகளில் இருந்து நீர் கொண்டு வந்து கோபுரக் கலசங்களின் மீது ஊற்றுகின்றனர். இதுதவிர தினமும் கோயிலுக்குள் இருக்கும் மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. சிவனுக்கு அபிஷேகப் பிரியன் என்ற சிறப்புப் பெயரும் வழங்குகிறது. ஆனி மாதம் நடராசருக்கென்று சிறப்பாகத்
திருமஞ்சனம் நடக்கிறது.

தண்ணீரின் அறிவியல் உண்மைகள்

தண்ணீர் சடங்குகள் பற்றிய அறிவியல் உண்மைகள் வியப்பூட்டுகின்றன. தண்ணீர் கொட்டுவதைப் பார்ப்பதும் தண்ணீரின் இசையைக் கேட்பதும் மூளைக்கு அதிக ரத்தத்தைச் செலுத்தி மனதை அமைதிப்படுத்தி உடல் சோர்வை நீக்குகிறது. மேலும் தண்ணீரினால் நியூரோ கெமிக்கல் எனப்படும் நரம்புக்கு ஊட்டம் தரும் வேதிப் பொருட்கள் மனித மூளையில் அதிகளவில் நரம்புகளில் செல்கின்றன. இதனால் நரம்புகள் வலுப்படுகின்றன.

மேலும், தண்ணீரை அதிகமாக குடிக்கும்போது அது உடம்பிலுள்ள நச்சுப் பொருட்களைக் கழுவி விடுகின்றது. உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொண்டு செல்ல தண்ணீர் உதவுகின்றது. உடம்பின் வெப்பத்தை முறைப்படுத்தி PH சம நிலையைத் தக்க வைக்க தண்ணீர் உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்க தண்ணீர் உதவுகின்றது.

இவைதவிர தண்ணீருக்கு அருகில் இருந்தாலும் தண்ணீரின் ஒலியைக் கேட்டாலும் அதிக தண்ணீர் பருகினாலும் தண்ணீரின் அருகில் இருந்தாலும் (தலைமாட்டில் ஒரு செம்பு தண்ணீர் வைத்து கொண்டு படிப்பதாலும்) நரம்பு மண்டலத்தில் இருக்கக்கூடிய பேராசிம்பதெடிக் என்ற முறையை விரைவாக செயல்பட ஊக்குவித்து மனிதனின் மனதிற்கு அமைதியையும் அவனுக்கு உணவு சீரணிக்கும் சக்தியையும் கொடுத்து உதவுகின்றது. இதனால்தான் குற்றாலம் போன்ற அருவிகள் இருக்கும் இடங்களில் பைத்தியம் பிடித்தவர்களை அழைத்துச் சென்று தலையில் வேகமாக தண்ணீர் படும்படி குளிக்க வைத்து அவர்களின் நோயை சுகம் ஆக்குகின்றனர்.

தண்ணீரின் மருத்துவ மந்திர சக்தி

நாட்டுப்புறங்களில் தண்ணீரால் பல சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. விஷக் கடிக்கு தீர்த்தம் கொடுப்பது, கோயிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கிப் பருகுவது, பிரிந்த குடும்பங்கள் மற்றும் தனி மனிதர்கள் ஒருவருக்கொருவர் செம்புத் தண்ணீர் கொடுத்து சேர்ந்து கொள்வது என்று பல சம்பவங்களில் தண்ணீர் மருத்துவப் பயன் கொண்டதாகவும் மந்திரசக்தி கொண்டதாகவும் விளங்குகிறது.

தண்ணீரின் சமூகச் செயல்பாடுகள்

1962இல் பிளாக்மன் என்பவர் தண்ணீர்ச் சடங்குகள் பற்றி எழுதும் போது இவை மந்திர சக்தி உடையவை. சமயங்களில் பயன்படுபவை என்று இருவகைப்படுத்தி விளக்குகின்றார். இதுதவிர தண்ணீரைக் கொண்டு பிரித்தல், மாற்றுதல், மீண்டும் இணைத்தல் ஆகிய மூன்று செயல்பாடுகள் நடப்பதாக அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர். நம் தமிழ் மரபிலும் இம்மூன்றும் காணப்படுகின்றது.

1. பிரித்தல் – தன் குடும்பத்தை விட்டு ஒருவரைப் பிரிந்து செல்ல வைத்தல் அல்லது தன்னுடைய தொடர்பில் இருந்து பிரித்து விடுதல் என்பதைத் தண்ணீர் தெளித்து விடுதல் அல்லது அவனைக் கை கழுவி விடுதல் என்ற தொடர்களை பயன்படுத்துகின்றனர்.

2. மாற்றுதல் – ஒருவர் ஒரு மரபில் இருந்து இன்னொரு மரபுக்கு மாறும் பொழுது அந்நிகழ்வை மடைமாற்றம் என்ற பெயரால் அழைக்கின்றனர்.

3. இணைத்தல் – செம்பு தண்ணீர் கொடுத்து இரண்டு குடும்பங்கள் இணைந்து கொள்ளும்போது அவற்றை மீண்டும் இணைத்தல் என்ற வழக்கின் கீழ் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறாகத் தண்ணீர் மனிதகுல வரலாற்றில் அன்று முதல் இன்றுவரை சடங்குகளின் ஊடாக சமூக வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து உள்ளதை அறியலாம்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags : Buddhists ,Tirtha Glory ,Shiva Temples ,
× RELATED திருவாரூர் சற்குணேஸ்வரர் திருக்கோயில்