×

குடும்பத்தை காக்கும் கரைப்பூண்டி மகான்…

22 மகான்

மத்வ சம்பிரதாயத்தில், ஒவ்வொரு மடாதிபதிகளுக்கும், ஒவ்வொரு மகத்துவம் நிறைந்து இருக்கும். அதற்காகத்தான் இந்த தொகுப்பின் தலைப்பிற்கு “மகத்துவமிக்க மத்வ மகான்கள்’’ என்னும் பெயர் வைத்திருக்கின்றோம். அது போலவே.. மத்வ சம்பிரதாயத்தில் பிடி சந்நியாசிகளுக்கென்று தனி மகத்துவமும் உள்ளது. சமீபத்தில், கரைப்பூண்டியில் இருக்கும் “ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனத்தை’’ பற்றி நன்கு தெரிந்துகொண்ட பிறகு, நாம் அதனை உணர்ந்துகொண்டோம். நீங்களும் அவரை பற்றி இந்த தொகுப்பில் படித்தவுடன், ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மகிமைகளை தெரிந்துகொள்வீர்கள்!

மலையின் நிழல்

செய்யாற்றின் அருகே இருக்கும் ஊர், கரைப்பூண்டி. இங்கு, மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும், பிடி சந்நியாசியான ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனமும் இருக்கிறது. கரைப்பூண்டி, பரபரப்புகள் இல்லாத அமைதியான ஊர். ஆனால், ஆன்மிகத்திற்கு பெயர் பெற்றது என்கிறார்கள் ஆன்மிக ஆர்வலர்கள். ஆம்… கரைப்பூண்டியில் இருந்து சிறிது தூரத்தில் போளூர் என்கின்ற ஊர் இருக்கிறது. இங்கு, சம்பத்கிரி என்னும் மலையில் “ஸ்ரீ நரசிம்மசுவாமி’’ அருள்கிறார். பூமி, குறிப்பிட்ட ஒரு திசையில் சுழலுகின்றபோது, சூரியனின் கதிர் ஒளி, சம்பத்கிரி மலையின் மீது கடந்து, அதன் நிழலானது கரைப்பூண்டியில் விழுகிறது. இதனை ஆன்மிக அதிசயமாக கருதுகிறார்கள்.

இதுனாலத்தான் என்னவோ… மகான் ஸ்ரீ வியாசராஜர் அனுமனையும், மகான் ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனமும் கரைப்பூண்டியில் இருக்கிறது போலும்! அந்த ஊரில் வசித்து வரும் மணி என்பவர், கோயிலை நமக்கு சுற்றிக் காட்டினார். சில தகவல்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியதாவது;

தங்கமான மணி

“நாங்க இரண்டு தலைமுறையா.. இந்த கோயிலை சுத்தம் செய்து பராமரித்து வருகிறோம். என் அப்பா, கூட்டி பெருக்கி சுத்தம் செய்து வந்தார். இப்போ.. நான் சுத்தம் செய்து வருகிறேன். அதுனாலத்தான் என்னவோ.. இன்னிக்கு என் புள்ள குட்டி நல்லா இருக்கு. என் பையன் வெளிநாட்டுல வேலை செய்யிறான். அதுக்கு காரணம் இந்த ஆஞ்சநேயருதானுங்க’’ என்று மனதில் பட்டதை வெள்ளந்தியாக கூறினார். பொதுவாக, கோயிலை பற்றி அர்ச்சகர்கள் அல்லது நிர்வாகிகள்தான் கூறுவார்கள். ஒரு சாதாரண மனிதர் கோயிலை பற்றி கூறுவது வியப்பாக இருந்தது. மேலும் அவர் பேசத் தொடங்கினார்.

“நான் பொறந்ததுலேந்து இந்த கோயிலை பார்த்து வறேன். எனக்கு வேண்டலாம் தெரியாது. மனசு பாரமா இருந்தா இங்க வந்துடுவேன்’’ என்று கூறினார். “சார்.. இங்க சங்கர்ஷண ஒடையருனு ஒரு மகானோட பிருந்தாவனம் இருக்குன்னு சொன்னாங்க எங்க இருக்குது?’’ என்று மணியிடம் கேட்டோம்.“அது தனியா ஆத்தங்கரை ஒட்டி இருக்கு. வாங்க கூட்டிட்டு போறேன்’’ என்று சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடம், அவர் வாழ்ந்த வீடு, தவம் செய்த இடம் என அனைத்தையும் பொறுமையாக சுற்றிக் காட்டிய மணிக்கு, இந்த இடத்தில் நாம் நன்றியை சொல்லியே ஆகவேண்டும்.

எங்கும் நாகர்கள்

அனுமன் கோயிலுக்குள்ளே சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கிறது என்று நாம் நினைத்தோம். ஆனால், அனுமனின் கோயிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில், செய்யாறு ஒட்டி சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் அமைந்திருக்கிறது. ஆக, அனுமனின் கோயில், ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம், அவர் வாழ்ந்த வீடு, இது தவிர அனுமன் கோயிலின் அருகருகே விஷ்ணு – சிவன் ஆலயங்கள் என கரைப்பூண்டியே சாந்நித்யம் நிறைந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. முதலில், அனுமன் கோயிலை பற்றி தெரிந்துகொள்வோம். கோயில் இன்றும் பழமை மாறாது இருக்கிறது.

கோயிலில் மொத்தம் மூன்று நாகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் இல்லை. சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடம், அவர் வாழ்ந்த வீடு என அனைத்து இடங்களிலும் நாகர்களின் சிலைகள் காணப்படுகின்றன. நாகர்களுக்கும் இக்கோயில்களுக்கும் ஏதோ தொடர்புள்ளது என்பதனை புரிந்துகொண்டோம். நாகர்கள் அருகில், விஷ்ணுவின் சிலை ஒன்று புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவைகளை கடந்து உள்ளே சென்றால், அனுமன் காட்சியளிக்கிறார். கோயிலை வலம் வந்தோமேயானால், அனுமனுக்கு நேர் எதிரில் துளசி மாடம் ஒன்றும் உள்ளது.

சோளிங்கரை நோக்கி அனுமன்

இந்த அனுமாருக்கு “முக்ய பிராணன்’’ என்று பெயர். கோயிலுக்கு பின்புறத்தில், 750 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசமரம் உள்ளது. இக்கோயில் அனுமன், வடக்கு நோக்கி அருள்கிறார். இதற்கும் ஒரு காரணம் உண்டு. இங்கிருந்து வடக்கு திசையில்தான், சோளிங்கர் என்னும் இடத்தில் நரசிம்மர் இருக்கிறார். அவரை பார்த்தவாறு, அனுமன் பிரதிஷ்டையாகியுள்ளார். அனுமன் ஜெயந்தி அன்று காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். அன்றைய தினத்தில், சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் வருகைதந்து, வேத பாராயணங்கள், புரந்தரதாசர் கீர்த்தனைகள் என அனுமன் ஜெயந்தியில் விழாக்கோலம் இருக்கும். அனுமனை நன்கு தரிசித்துவிட்டு, ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனத்தை காண ஆவலானோம்.

பிருந்தாவனம் மேலே சிற்பம்

செய்யாற்றின் மிக அருகிலேயே மகான் ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் அமைந்துள்ளது. அவ்விடமே நிசப்தமாக இருந்தது. பிருந்தாவனம் இருக்கும் இடத்தில் நுழைந்தவுடன், எலுமிச்சை மரமும், துளசி மாடமும் அழகுறக் காட்சியளிக்கின்றன. பிருந்தாவனம் இருக்கும் நுழைவாயில், மிக சிறியதாகும். அனைவரும் குனிந்துதான் செல்ல வேண்டும். உள்ளே சென்றவுடன், இடம் – வளம் என இருபுறத்திலும் நாகர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு அனுமனும் இருக்கிறார். அதன் பிறகு, மிக சிறிய அளவில் ஸ்ரீ சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் காணப்படுகிறது. பிருந்தாவனம் மிக சிறியதாக காணப்பட்டாலும், அவரை கண்ட மாத்திரத்தில் இனம் புரியாத ஏதோ ஒரு பந்தம் ஏற்படுகிறது. பிருந்தாவனத்தின் மீது பெரிய நாகம் ஒன்றும் உள்ளது.

அதே போல், சங்கர்ஷண ஒடையரின் பிருந்தாவனத்தின் மீது விக்ரக அனுமாரும், அவர் அருகில் குழந்தை கிருஷ்ணரும் அருள்கிறார்கள். மிக முக்கியமாக, சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடத்திற்கு மேலே, ஒரு சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிற்பத்தை பலரும் பல விதமாக கூறுகிறார்கள். சிலர், இதை நாகம் என்றும், சங்கர்ஷண ஒடையர் பிருந்தாவனம் ஆன பிறகு, சிற்பியே சங்கர்ஷண ஒடையரை போன்று வடிவமைத்திருக்கலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது. இருந்த போதிலும், அந்த சிற்பத்தை காணும் போது தெய்வ கடாட்சம் தெரிகிறது.

மேலும், சங்கர்ஷண ஒடையரின் மூலபிருந்தாவனம் இருக்கும் இடமானது, பிருந்தாவனத்தை போல் தோற்றம் கொண்டதாக உருவாக்கியுள்ளார்கள். இங்கிருந்து பார்த்தாலே சம்பத்கிரி மலை தென்படுகிறது. சங்கர்ஷண ஒடையரை பற்றி மேலும் பல தகவல்களை விவரிக்கிறார், கோயில் நிர்வாகியான ராகவேந்திரராவ். அவர் கூறியது அப்படியே.

இளமை காலம்

1810-ஆம் ஆண்டு முதல் 1862-ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மிக பெரிய மகான்தான், ஸ்ரீ சங்கர்ஷண ஒடையர். இவரின் பூர்வாஸ்ரம பெயர் “தம்மண்ண நாயக்’’. இவர்களது குடும்பத்தினர்கள் “மாலப் பிரபா’’ என்னும் நதிக்கரையிலுள்ள “குர்லா ஹொசூர்’’ பகுதியில் வாழ்ந்துவந்தார்கள். நாயக் குடும்பத்தினர்கள் தங்கம், வெள்ளி, வைரம், முத்து ஆகிய விலை உயர்ந்த பொருட்களை வியாபாரம் செய்துவந்தனர். வியாபாரம் விரிவடைவதற்காக தம்மண்ண நாயக் குடும்பத்தினர், கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதிக்கு குடியேறிவிட்டனர்.

அங்குதான் தம்மண்ணாவிற்கு உபயணம் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத்தில், ஸ்ரீ பீமவராஹாச்சாரியார் என்னும் குரு, தம்மண்ணனுக்கு கிடைக்க, அவரிடமிருந்து கிரந்தங்களை கற்றுவந்தார். தவிர, சிறுவயது முதல் ஏகாதசி உபவாசம், தினசரி சாளக்கிராம பூஜை ஆகியவற்றை செய்துவந்தமையால், பீமவராஹாச்சாரியார் தம்மண்ணாவை, ரிஷி என்றே பெருமையாக அழைப்பாராம்.

தம்மண்ண நாயகருக்கு திருமணம் வயது வந்தவுடன், பெரியோர்கள் இவருக்கு திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். இல்லற வாழ்வை செவ்வனே நடத்தி வந்த தம்மண்ணருக்கு, இரண்டு குழந்தைகள் பிறந்தது. சிறிது காலத்தில் அதாவது தம்மண்ணரின் இருபத்திரெண்டாம் வயதில் மனைவி மரணிக்க, அதன் பின் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளாமல், அவரின் கவனம் முழுவதும் ஆன்மிகத்தில் பயணித்தது.

அதன் விளைவாக, ரஜதபீடபுரம் என்று சொல்லக் கூடிய உடுப்பி சேத்திரத்திற்கு சென்று, அப்போதைய சோதே மடத்து பீடாதிபதியான ஸ்ரீ விஸ்வப்ரிய தீர்த்தரிடத்தில் “ஸ்ரீ பாஷ்யம்’’ முதலான 37 கிரந்தங்களை கற்றுத் தேர்ந்தார். இத்தகைய சீடரான தம்மண்ண நாயகரை, விஸ்வப்ரிய தீர்த்தர் கொண்டாடினார்.

சந்நியாசம் பெறுவது

லௌகீக வாழ்வில் பிடியில்லாது, தன் அண்ணன் வீட்டில் சில காலம் வாழ்ந்த தம்மண்ண நாயக், உடுப்பிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு ஸ்ரீ சத்யபராயண தீர்த்தரிடம் அறிமுகம் கிடைக்கிறது. அவருக்கு பணிவிடைகளை செய்துவந்திருக்கிறார், தம்மண்ண நாயக். சிறிது காலம் கழித்து, தான் சந்நியாசம் ஏற்க விரும்புவதாக ஸ்ரீஸ்வாமிகளிடம்கூற, சந்நியாசம் பெறுவது அவ்வளவு எளிதல்ல. தினமும் அதற்கு கடும் நியமனம் இருக்கிறது.

அதனை கடைபிடிக்க வேண்டும் என்றுகூறி சமாதானம் செய்துள்ளார், சத்யபராயண தீர்த்தர். பல ஆண்டுகள் ஆகியும், தம்மண்ண நாயக் தனக்கு சந்நியாசம் வேண்டும் என்கின்ற திடமாக வைராக்கியத்தோடு இருக்க, இதனை கண்ட சத்யபராயண தீர்த்தர், அவருக்கு சந்நியாசம் கொடுத்து, “ஸ்ரீ சங்கர்ஷண ஒடையர்’’ என்ற பெயர் சூட்டி, அவர் தினமும் பூஜை செய்வதற்காக வெள்ளியால் செய்யப்பட்ட, ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் விக்ரகத்தை கொடுத்தார். அன்று முதல், ஸ்ரீ சத்யபராயண தீர்த்தரின் சீடரானார், ஸ்ரீ சங்கர்ஷண ஒடையர்.

பகவானின் பூஜைகள், வேதபாராயணம், ஜபங்கள் என இடைவிடாது தினமும் செய்துவந்திருக்கிறார். அது மட்டுமா! மத்வ மகான் ஸ்ரீ ஜெகந்நாததாசர் இயற்றிய “ஹரிகதாம்ருதசாரம்’’ என்னும் உயரிய மத்வ நூலிற்கு வியாக்கியானம் அதாவது விளக்கவுரையினை ஸ்ரீ சங்கர்ஷண ஒடையர் எழுதியிருக்கிறார் என்பது மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

– தொடரும்

ரா.ரெங்கராஜன்

Tags : PTI ,
× RELATED திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்