×

தானம் தர்மம் பாவம் புண்ணியம்

தானம், தர்மம், பாவம், புண்ணியம் – இந்த நான்கு வார்த்தைகளும் அடிக்கடி நாம் கேள்விப்படும் வார்த்தைகள். வழக்கத்தில் இந்த நான்கு வார்த்தைகளும் அவ்வப்பொழுது பயன்படுத்தப்பட்டாலும் அவைகளின் முறையான அர்த்தத்தைத் தெரிந்து பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. தானம் வேறு; தர்மம் வேறு. அதேபோலவே பாவம் வேறு; சாபம் வேறு இதற்கு நிறைய விளக்கங்கள் வெவ்வேறு விதமாகப் பெரியவர்களால் சொல்லப்பட்டாலும் நாம் மிக எளிதாகப் புரிந்து கொள்வதற்கு சில விஷயங்களைச் சொல்கிறேன். அதையும் நம்முடைய பேச்சு வழக்கிலிருந்து நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.தானம் என்பது குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டவர்களுக்குத் தருவது.தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.என்பது – குறள் இதில் தானம் என்பது தக்கார்க்கு உவகையோடு (மகிழ்ச்சியுடன்) அறநெறியில் வந்த பொருளைக் கொடுத்தல் என்று வரும்.உதாரணமாக, நம் வீட்டில் திருமணம், காதுகுத்தல், ஹோமங்கள் முதலிய நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது அதன் ஒரு பகுதியாக, தானம் தர வேண்டி இருக்கும். அதைப்போலவே வீட்டில் திதி, தர்ப்பணம் மற்றும் சுப ஸ்வீகரணம் முதலிய அபரச் சடங்குகளை (அசுபச் சடங்குகள்) நடத்தும் பொழுதும் தானம் தர வேண்டி இருக்கும்.

தானங்களில் ஏராளமான வகை உண்டு. கருட புராணத்தின்படி, மறைந்த ஆன்மா யமலோகப் பயணத்தை எளிதாகக் கடக்கவும், பாவங்களைப் போக்கி முக்தி பெறவும் 12-ம் நாளில் வழங்கப்படும் பத்து முக்கிய தானங்கள் தச தானங்கள் எனப்படுகின்றன.கோ (பசு), பூமி, எள், தங்கம், நெய், வஸ்திரம், தானியம், வெல்லம், வெள்ளி, உப்பு ஆகியவை இந்த பத்து முக்கிய தானப் பொருட்களாகும். எந்தெந்த தானங்களை யார் யாருக்கு, எப்பொழுது தரவேண்டும் என்றும் சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, தானம் தருவதற்கு என்று ஒரு முறை காலம் இருக்கிறது. அப்படித் தானம் தரும்பொழுது சொல்ல வேண்டிய மந்திரப் பிரயோகங்களும் இருக்கின்றன.ஆனால், தர்மம் அப்படி அல்ல. கோயிலுக்குப் போகிறோம் அங்கே யாசகர்கள் ‘தர்மம் போடுங்க சாமி’ என்று கேட்கும் பொழுது நாம் நம்மால் முடிந்த உணவோ, பொருளோ, காசோ அவர்களுக்கு வழங்குகின்றோம். பசியோடு வருபவர்களுக்கு அன்னம் படைக்கின்றோம். உடைகள் இல்லாதவர்களுக்கு உடைகள் வழங்குகின்றோம்.

இந்த உடைகள் ஒரு குறிப்பிட்ட சடங்கின் பகுதியாக வழங்குகின்ற பொழுது வஸ்திர தானம் ஆகிவிடும் அந்த வஸ்திர தானத்தை எல்லாருக்கும் தர முடியாது. வந்திருக்கக்கூடிய புரோகிதர்களுக்கோ, அல்லது அந்த தானத்தைப் பெறுவதற்கென்றே பிரத்தியேகமாக வந்திருக்கிறவர்களுக்குத் தான் தர முடியும்.ஆனால், எதாவது ஒரு விழாவின் பொழுது, இருபது முப்பது பேருக்கு வேட்டி சேலை வாங்கித் தருகிறோம் என்று சொன்னால் அது தர்மம் ஆகும்.தானம் என்பது சடங்கின் ஒரு பகுதி. அது எல்லா நேரத்திலும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தர்மம் என்பது எல்லா நேரத்திலும், நம்மால் முடிந்த அளவுக்குச் செய்ய வேண்டியது. இந்த வேறுபாட்டைத் தெரிந்து கொண்டால் போதும்.இதைப் போலவே சாபத்தையும் பாவத்தையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

மேலே சொன்ன தர்மத்தின் எதிர்பதமாக உள்ள அதர்மத்தின் விளைவு தான் பாவம். ஒரு செயலின் தீமையான விளைவை பாவம் என்றும், நன்மையான விளைவை புண்ணியம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். புண்ணியத்தை தர்மமாகவும் பாவத்தை அதர்மமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அறத்திற்கு மாறாக வாழும் “பிழை” செயல்கள் பாவம் .ஆண்டாள் தம்முடைய பாசுரத்தில் பாவங்களை “பிழை” என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றாள்.“போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்பது ஆண்டாள் திருப்பாவை. ஒருவன் தூய்மையாக இருந்து, பகவானுடைய நாமங்களைச் சொன்னால் அவனுடைய தீவினைகளாகிய பாவங்கள் தீயில் பட்ட பஞ்சைப் போல அழிந்து விடும் என்பது இந்தப் பாசுரத்தின் கருத்து.

பெரும்பாலான பாவங்களுக்கு சாத்திரத்தில் பிராயச்சித்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. செய்த பாவங்களுக்கு ஒருவன் வருந்தி அதற்கான கழுவாயைத் தேடிக் கொள்வதற்கான வழிவகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் சாபம் அப்படி அல்ல.ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். ஒருவனை நீங்கள் ஏமாற்றி விடுகிறீர்கள். அவன் ஏமாந்தது அவனுக்கே தெரியவில்லை. நீங்கள் ஏமாற்றிய போதும் அவன் மகிழ்ச்சியோடு அவனுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆயினும் நீங்கள் ஏமாற்றியது பாவம் தான். பிழை தான். அந்தப் பிழையானது நிச்சயமாக உங்களுக்கு எதிர்வினையைத் தரவே செய்யும்.இதை பாவம் என்று சொல்லலாம்.

ஆனால் இப்பொழுது நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்பது அவனுக்குத் தெரிந்து விடுகிறது ஆனால் உங்களை எதிர்க்க முடியவில்லை. அவ்வளவு பலமாக இருக்கிறீர்கள் உங்களிடம் எதிர்த்துக் கேட்க முடியவில்லை தான் ஏமாந்து போனதை நினைத்து அவன் வருந்துகின்றான். அவனுடைய வயிறு எரிகிறது.“இப்படி என்னை ஏமாற்றி விட்டாயே, நீ நன்றாக இருப்பாயா” என்று அவன் மனதார உங்களைச் சபிக்கிறான். இந்த வார்த்தைகள் சத்திய உருக்கொண்டு உங்களை அடைகின்றன. இதற்குச் சாபம் என்று பெயர்.பாவத்திற்கு பொதுவாக பிராயச்சித்தம் உண்டு. சாபத்திற்கு சாபம் கொடுத்தவர்கள் தான் பிராயச்சித்தம் சொல்ல வேண்டும்.பாவம் அழுக்கு போல; நீரில் மூழ்கியோ அல்லது வேறு சாதனங்களைப் பயன்படுத்தியோ நீக்கிக் கொள்வதற்கு வழி உண்டு. ஆனால் பாவம் வெட்டுக் காயம் போல; நீங்கள் என்னதான் மருந்து போட்டு ஆற்றினாலும் கூட, அந்த வடு இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் சாபம் வாங்காமல் வாழ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

இதைப் புராணங்களில் நாம் பார்க்கலாம்.“போய பிழையும் புகுதருவான்” என்று சொன்ன ஆண்டாள், இன்னொரு பாசுரத்தில் “எங்கள் மேல் சாபம் இழிந்தேல் ஓர் எம்பாவாய்” என்று சாபத்தின் கொடுமையையும் வலிமையையும் பாடுகின்றாள்.அதற்கு உரையாசிரியர்கள், தேவர் களாக இருந்தாலும் சாபம் விடாது என்று சொல்லி,உதாரணத்திற்கு நான்கு வகையான சாப வரலாற்றைச் சொல்லி இருக்கின்றார்கள்.

* பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளியதால் சிவபெருமானுக்கு பிரம்ம கபாலம் ஒட்டிக்கொண்டது. அவர் பிச்சாண்டியாக மாறினார்.
* தட்சனின் பெண்கள் 27 பேர். சந்திரன் மணந்து கொண்டான். 27 மனைவிகளில் ரோகிணியின் மீது மட்டும் அன்பு செலுத்தியதால் மாமனாராகிய தட்சனின் சாபம் சந்திரனுக்கு குன்ம நோயைத் தந்து படாத பாடு படுத்தியது.
* மகாலட்சுமியின் பிரசாதத்தை அவமதித்த இந்திரனுக்கு துர்வாச முனிவர் தந்த சாபத்தால் தேவேந்திரன் தன்னுடைய செல்வங்களை இழந்தான்.
* அகலிகைக்கு கௌதம ரிஷி தந்த சாபம் அவளைக் கல்லாய் மாற்றியது.இந்தச் சாபங்களுக்கு விமோசனங்கள் கிடைத்தன என்றாலும் அதற்குப் பல காலங்கள் ஆயின.
எனவே, பாவங்களை செய்யாமல் தான தர்மங்களைச் செய்து, யாரிடமும் சாபங்களை வாங்காமல் வாழ வேண்டும்.

Tags :
× RELATED தண்ணீர் வழிபாடும் சடங்குகளும்