×

தெளிவு பெறு ஓம்

?எல்லா சுபகாரியங்களிலும் குத்துவிளக்கு ஏற்ற வேண்டுமா?
– சிவசங்கரன், தூத்துக்குடி.

அதில் என்ன சந்தேகம்? சுப நிகழ்ச்சிகளின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றுவது நமது மரபு. ஆனால் தினம் பூஜை அறையில் அகல் விளக்கு ஏற்றலாம். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றலாம். மகாலட்சுமி விளக்கு ஏற்றலாம். இன்னொரு விஷயம். சிலர் எவர்சில்வர் விளக்கு ஏற்றுவார்கள். அது கூடாது. பித்தளை அல்லது வெள்ளி விளக்கு ஏற்றலாம். அல்லது சாதாரண அகல்(மண்) விளக்கு போதும்

?தோஷம் இல்லாத முகூர்த்த நேரம் இருக்கிறதா?
– பவானி, திருச்சி.

பொதுவாகவே கொஞ்சமும் தோஷம் இல்லாத முழு சுப நேரம் என்று ஒன்று இருப்பதற்கு வழி இல்லை எப்படி இருந்தாலும் அந்த நேரத்தில் குறைந்த அளவுக்காவது ஏதாவது ஒரு வகையில் தோஷம் இருக்கவே செய்யும். அதனால்தான் குறைந்த தோஷமும் நிறைந்த மங்கலமும் நிறைந்த நேரத்தை முகூர்த்த நேரமாக நிர்ணயம் செய்து கொடுக்கிறார்கள். ஆயினும் கூட எந்த நாளாக இருந்தாலும் , ஒரு நாளைக்கு மூன்று நேரங்கள் தோஷமில்லாத முகூர்த்த நேரங்கள் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். அதில் ஒன்று அதி காலையில் பிரம்ம முகூர்த்தம்.

இரண்டாவதாக உச்சி கால வேளையில் வருகின்ற அபிஜித் முகூர்த்தம். மூன்றாவதாக மாலையில் பசுக்கள் மேய்ச்சலுக்குப் பின் கொட்டடிக்குத் திரும்பும் நேரம் என்று சொல்லப்படும் கோதூளி முகூர்த்தம். இந்த மூன்று முகூர்த்தத்திலும் நாள், திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் இருந்தாலும் எல்லா நல்ல காரியங்களையும் செய் யலாம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

?பகவத் கீதை தினமும் படிப்பதால் நன்மை உண்டா?
– பாலசுப்ரமணியன், சிதம்பரம்.

பல அறிஞர்கள் பகவத் கீதையை தங்கள் வழிகாட்டி நூலாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தி, திலகர், வினோ பாபாவே இவர்களெல்லாம் தங்கள் மனக்குழப்பத்துக்கு மருந்தாக பகவத் கீதையைக் கருதினார்கள். உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பகவத் கீதை. சகல உபநிடதங்களின் சாரம். இதில் தினம் ஒரு சுலோகம் பொருளோடு படிப்பது நம் முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும், தெளிவுக்கும், ஆன்ம பலத்துக்கும் உதவி செய்யும்.

?நவகிரகங்களின் சக்தி வாய்ந்தவர் யார்? சிலர் சனி தான் என்று சொல்கிறார்களே?
– ராமகிருஷ்ணன், கோவிந்தபுரம்.

நவகிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் சக்தி வாய்ந்த கிரகங்கள் தான். அதில் பேதம் இல்லை. சிலர் சனியைச் சொல்வதற்கு காரணம், அவர்தான் ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசி மாறுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கின்றார். இரண்டரை வருட காலங்கள் எடுத்துக் கொள்ளுகின்றார். அதனால் அவருக்கு சனைச்சரன் (மெல்ல நடப்பவர்) என்று பெயர். சிலர் இதை சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டம் சேர்த்துச் சொல்லுகிறார்கள். அது சரியல்ல. சனி பகவான் குரு பகவான் என்று சொல்வதெல்லாம் உபச்சார வழக்குகள்தான்.

?சிலர் பிரார்த்தனை செய்தவுடன் நிறைவேறுகிறது; சிலருக்கு தாமதமாகிறது. தெய்வம் அவரவர்களுக்கு தகுந்த மாதிரி தான் பலன் தருமா?
– சுவாமிநாதன், வைத்தீஸ்வரன் கோவில்.

இதற்கு ஒரு உதாரணம் சொன்னால் உங்களுக்குப் புரியும். சிலருக்கு நோய் வந்தாலும் ஒருவேளை மருந்து சாப்பிட்டாலே குணமாகிவிடுகிறது. சிலருக்கு பல நாட்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டி இருக்கிறது. சிலருக்கு அதோடு பத்தியமும் இருக்க வேண்டியிருக்கிறது. இது நோயின் தீவிரத்தைப் பொறுத்தது. அதைப் போல நம்முடைய வினைகளின் தீவிரத்தைப் பொறுத்தது தான் அதிலிருந்து விடுபடுவதும். இதில் பகவான் ஒருவருக்கு ஒரு மாதிரியும் இன்னொருவருக்கு இன்னொரு மாதிரியும் பலன் தருவ தில்லை. மருத்துவர் நோய்க்குத் தகுந்த மாதிரி தான் மருத்துவம் செய்வாரே தவிர, ஆளுக்கு தகுந்த மாதிரி மருத்துவம் செய்ய மாட்டார். மருத்துவனாகிய பகவானும் அதைப்போலத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

?பெருமாளுக்கு என்னென்ன புஷ்பங்களைச் சமர்ப்பிக்கலாம்?
– ஜெயராமன், கோவை.

எல்லா புஷ்பங்களிலும் தலை சிறந்தது துளசி. துளசியை விட பெருமாளுக்கு உகப்பானது வேறு ஒன்றும் இல்லை. துளசி செடி அருகில் வந்துவிட்டால் பெருமாள் பிராட்டியைக் கூட சற்று நேரம் மறந்து விடுவாராம். அத்தனை ஈடுபாடு துளசி மீது. ‘‘நாற்றத் துழாய் முடி நாராயணன்” என்று ஆண்டாள் சிறப்பாக இதனைப் பாடுகின்றாள். இதுதவிர பவழமல்லி, மல்லிகை, இருவாட்சி என்று வாசனையுள்ள மலர்களையும் பெருமாளுக்குச் சாற்றலாம். என்னென்ன புஷ்பங்களையெல்லாம் சாற்ற வேண்டும் என்பதற்காக பெரியாழ்வார் பூச்சூட்டல் என்ற தலைப்பில் ஒரு பதிகம் பாடியிருக் கிறார். அதில் ஒரு பாசுரம் இது.

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இரு வாட்சி,
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்டவா என்று,
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம் மாலை,
பண்பகர் வில்லி புத்தூர்க் கோன் பட்டர் பிரான் சொன்ன பத்தே.

?எத்தனையோ இலைகள் இருக்கும் பொழுது வாழை இலையில் சாப்பிடுவது மட்டும் பொதுவாகவும் இயல்பாகவும் இருக்கிறது. வாழை இலைக்குத் தனிச் சிறப்பு உண்டா?
– மகாதேவன், வேதாரண்யம்.

முதலில் வாழை இலை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இரண்டாவதாக உணவு சாப்பிடும்படியான ஒரு அமைப்புடன் வாழையிலை அகலமாக வசதியாக இருக்கிறது. நம்முடைய உணவில் நிறைய காய்கறிகள் சாப்பாடு என்று இலை நிறைய வைத்து சாப்பிடுவதற்கு மிக வசதியானது வாழை இலை. மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. வாழை இலையில் சாப்பிடுவது தமிழர்களின் ஆரோக்கியமான பாரம்பரிய மரபாகும். இதில் சூடான உணவை உண்ணும்போது, இலையில் உள்ள குளோரோபில் மற்றும் பாலிபினால்கள் உணவில் கலந்து ஜீரணத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றுப் புண், தோல் நோய்களைக் குறைத்து பசியைத் தூண்டுகிறது. இது நச்சுத் தன்மையற்றது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது.

பரிமாறும்போது இலையின் நுனி, சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.நாம் சாப்பிடும்போது, வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால், இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..! உப்பு, ஊறுகாய், இனிப்பு கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் பரிமாற வேண்டும். சாதம், காய்கறிகள் இவற்றையெல்லாம் இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.

?உடல் வலிமை முக்கியமா? மன வலிமை முக்கியமா?
– ஜெயலட்சுமி, மயிலம்.

இரண்டு வலிமையும் தான் ஒருவருக்கு வேண்டும். இந்த இரண்டு வலிமையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. உடல் வலிமை, மன வலிமையைத் தரும். மன வலிமை உடல் வலிமையை அதிகரிக்கும். உடல் பலவீனமானால் மனதும் தளர்ந்து விடும். மனம் வலிமையோடு இருந்தால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே இரண்டையும் காத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் சித்தர்கள் ஆன்மிகத்தைப் பாடும் பொழுது உடல் வலிமைக்கான பல மருத்துவக் குறிப்புகளையும் கொடுத்தார்கள்.

?சிவபெருமானின் பிட்சாடனர் கோலத்தில் உள்ள தத்துவம் என்ன?
– பிரகாஷ்குமார், சுசீந்திரம்.

பிட்சாடனர் என்பது சிவபெருமானின், பிச்சை ஏற்கும் வடிவிலான திருக்கோலமாகும்; இது தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க சிவன் எடுத்த அவதாரம், இது 64 சிவ மூர்த்தங்களில் ஒன்றாகும், மேலும் ‘பிச்சதேவர்’ என்றும் அழைக்கப்படுகிறார். சிவபிரானின் பிட்சாடனர் கோலம் தென்னாட்டில் மட்டுமே காணப்படுவது. பிட்சாடனர் பற்றி வட இந்திய புராணங்களிலும் உண்டு. எனினும் அவரது திருக்கோலத்தை வணங்கும் முறையை சைவம் வளர்த்த தென்னாடே பின்பற்றியது. தமிழ்நாட்டில் பெரும் பாலான சிவாலயங்களில் இந்த மூர்த்தி இருப்பார். பொதுவாக பிட்சாட னருடன் உமையவள் இருப்பதில்லை.

அம்சமத் போதாகமம், காமிகா கமம், காரணாகமம், சில்ப ரத்னம் ஆகிய நூல்கள் பிட்சாடனர் வடிவை விளக்குகின்றன. தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம். நான்கு கரங்கள், முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும், பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை ஏந்தியும் மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும் முன் இடக்கரத்தில் கபாலம் கொண்டும் விளங்குகிறார்.

தலை ஜடாமண்டலத்துடனும் வலது காலில் வீரக் கழலும் உள்ளன. பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது. உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி; திரிசூலம் – அழித்தல், மானுக்குப் புல் கொடுத்தல் – அருள் புரிதல்; அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்; கபாலம் ஏந்தி நிற்பது – காத்தல். மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும், பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

கூர்மபுராணத்தில் பிட்சாடனரைப் பற்றி மற்றொரு குறிப்பு கூறப்படுகிறது. பிரம்மன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தது தாமென்று எண்ணிச் செருக்குற்றிருந்தார். பிரம்மனின் முன் லிங்கோத்பவராக ருத்ரன் தோன்றினார். வேதங்களும், ரிஷிகளும் ஏற்ற நிலையில் பிரம்மன் மறுக்க வேறு வழியில்லாது பிரம்மனின் ஐந்தாவது தலையைச் சிவன் (பைரவ வடிவில்) கொய்ததனால் “பிரம்மஹத்தி தோஷம்” பெற்றார். சிவன் காசி சென்றடைகிறார். பிச்சைப் பாத்திரம் ஏந்திய பிட்சாடனருக்கு அன்னை கரங்களால் பிச்சையளித்த கனமே “பிரம்ம கபாலம்” மறைந்ததாகவும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாகவும் குறிப்பிடுகிறது.

சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் பிட்சாடனர் வலம் வருவார். மயிலாப்பூர், சிதம்பரம், திருவண்ணாமலை தலங்களில் இதனைக் காணலாம். காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.

?இறைவன் திருநாமத்தைச் சொன்னால், ‘‘பாதகங்கள் தீர்த்து பரமன் அடிகாட்டும்” என்று வருகிறதே, நேரடியாகவே பரமன் அடி காட்டாதா?.
– கமலேஸ்வரி, கரூர்.

திருநாமம், பரமன் அடி காட்டும். ஆனால் நம்முடைய பாவம் திருவடி காட்டினாலும் பார்க்க முடியாதபடி நம் கண்களை மறைக்கும். தடுக்கும். அதனால் நம் பாவங்களை முதலில் தீர்த்துக் கொள்ள வேண்டும். திருநாமம் முதல் வேலையாக நம்முடைய பாவங்களை தீயில் போட்ட பஞ்சு போல பொசுக்கி விடும். (ஹரீர் ஹரதி பாபாநி-ஹரி நாமம் பாவங்களை எரிக்கும்) அதனால் தூய்மையாகி விடுவோம். தூய்மையான நமக்கு பகவானுடைய திருவடிகள் தெளிவாகத் தெரியும். இப்படிப் பாவங்களை நீக்கி இறைவனுடைய திருவடியைக் காட்டுவது அவருடைய திருநாமங்கள் என்பதுதான் இந்த வரிக்குப் பொருள்.

?மகாயுகம் என்றால் எதைக் குறிக்கும்?
– சக்திவேல், திருவாரூர்.

மகாயுகம் என்பது இந்து சமய காலக் கணக்கீட்டின்படி, கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களும் சேர்ந்த ஒரு முழுமையான காலச் சுழற்சியாகும், இது மொத்தம் 43,20,000 மனித ஆண்டுகள் நீடிக்கும். இது ‘‘சதுர்யுகம்” என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் ஆயிரம் மகாயுகங்கள் சேர்ந்தால் ஒரு கல்ப காலம் (பிரம்மாவின் ஒரு பகல்) ஆகும். வீட்டிலும் கோயில்களிலும் செய்யும் சங்கல்பத்தில் இந்த விஷயங்கள் வரும்.

தேஜஸ்வி

Tags : Sivasangaran ,Tuthukudi ,Subba ,Dinah Pooja ,Comatsi Amman ,Mahalakshmi ,
× RELATED தண்ணீர் வழிபாடும் சடங்குகளும்