×

ஸ்ரீ வைஷ்ணவத்தை தழைக்கச் செய்த திருக்கச்சி நம்பிகள்!

26.2.2026 – வியாழக் கிழமை – திருக்கச்சி நம்பிகள் திருநட்சத்திரம்

மல்லிகையின் மையத்தில் உதித்தாள் பாற்கடல் நாயகி. பூவிலிருந்து மலர்ந்ததால் புஷ்பவல்லி எனும் நாமம் ஏற்றாள். குளிர்ந்த மலர்கள் மலிந்த ஓர் தலத்தினில் அமர்ந்தாள். அத்தலத்தை எல்லோரும் பூந்தண்மல்லி என்று சிரசின் மீது கரம் உயர்த்தி கூப்பினர். மல்லியின் வாசம் பக்தர்களை அருகே அழைத்தது. கேட்காமலேயே கூடை கூடையாக கொட்டிக் கொடுத்தது. பூந்தண்மல்லி பூவிருந்தவல்லியின் நிரந்தர வாசம் செய்யும் தலமானது. வரதனும் புஷ்பவல்லிக்கு அருகே அமர்ந்தார்கள் அந்த ஊரின் வைசிய தம்பதியான திரு வீரராகவரையும், ஸ்ரீமதி கமலையாரையும் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கமலையாரின் மணிவயிற்றில் சட்டென்று ஓர் மல்லி மலரத் துவங்கியது. அவளை அருள் மணம் சூழ்ந்தது. தம்பதியருக்கு நான்காவது திருக்குமாரன் ஜனித்தான். காஞ்சி வரதனின் கருணையால் தோன்றிய திருக்குமாரனுக்கு திருக்கச்சி நம்பிகள் எனும் திருப்பெயரிட்டார்கள்.

பொருள் சேர்க்கும் வழியை பால பருவத்திலேயே அறுத்தார் திருக்கச்சி நம்பிகள். அவருக்கு ஆதரவாக திருமழிசை ஆழ்வாரும் கனவில் தோன்றினார். நம்பிகளின் அகமும் முகமும் அருட்செழிப்பு பூண்டது. ‘‘பெரியாழ்வாரைப் போல மலர் வனம் அமைத்து கச்சி வரதனுக்கு பூமாலை தொடுத்துப் போடேன்’’ என்றார். ஆஹா… என் பாக்கியம் என்று கண்ணீர் சொரிந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதனை கண்டு அளவிலா ஆனந்தமுற்றார். அர்ச்சாவதார மூர்த்தியாக விளங்கும் அத்திகிரி வாசன் வரதராஜன் மெல்ல திருவாய் உவந்து ‘‘உனது தொண்டினால் உவந்தோம் நம்பி’’ என்றார். தாங்களுக்கு செய்யும் திருத்தொண்டு தவிர வேறெதற்கும் இந்த ஜென்மம் இல்லை தேவராஜனே என்றார். பெருமாளும், நம்பிகளும் சகஜமாக பேசிக் கொண்டார்கள். சந்தேகித்து புருவம் சுருக்கி கேட்டோருக்கு அவன் எல்லோருக்கும் எளியன். அதே சமயம் இனியவன். உங்களுடனும் பேசுவான் என்று வெள்ளையாக பதிலுரைத்தார். அவருக்குள் புஷ்பவல்லித் தாயார் வெண்மையாகச் சிரித்தாள்.

செல்லுமிடங்களிலெல்லாம் வரதனின் வாசத்தை சுமந்து பரப்பினார். தானே எம்பெருமானோடு பேசினும் குருவருளின் தனிப்பெருமையையும் உணர்ந்திருந்தார். நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாரை குருவாக அடைந்து அவரின் திருவடியை சேவிக்கும் பாக்கியத்தை தா வரதா என்று வேண்டினார். திருவரங்கப்பெருமான் கச்சி நம்பிகளை கருணை கூர்ந்து நோக்கினார். கால்நடையாகவே அரங்கனின் நாமத்தை பாடியபடி ஸ்ரீரங்கம் அடைந்தார். திருக்கச்சி நம்பிகளின் வருகையை அறிந்த பெரிய நம்பிகள் அவரை பல பக்தர்கள் சூழ எதிர்கொண்டு அழைத்தார். வரதரோடு பேசும் திருவாயால் பெரிய நம்பிகளை நோக்கி, எங்கிருக்கிறார் என்னை கொண்டுபோய் ஆளவந்தாரின் திருவடிகளை காணச் செய்வீரா என்று கேட்டார். பெரிய நம்பிகள் பிரமித்தார். வரதனையே வா என்று அழைத்தவர், ஆளவந்தாரை பார்க்கத் துடிக்கும் ஆவலை கண்ணுற்று கனிவானார்.

நம்பிகளின் ஆழ்மனதை அறிந்த ஆளவந்தாரே கன்றுக்குட்டியை பிரிந்த பசுபோல தவித்து தானே முன் வந்தார். இன்னதென விளக்க முடியாத ஓர் அருட்சக்தியும், பேரின்ப அவஸ்தையில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். ஆளவந்தார் திருக்கச்சி நம்பிகளை ஆசிர்வதித்தார். பேரருள் சூழ்ந்து நிற்கும் தமது சிஷ்யரைப் பார்த்து பேரருளாளதாசர் எனும் திருப்பெயரிட்டு மகிழ்ந்தார். இப்பேற்பட்ட ஓர் குருவின் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்த பெரியநம்பிகளுக்கு தொண்டர் அடிப்பொடியராக சேவை செய்யும் பாக்கியத்தை கேட்டார், திருக்கச்சி நம்பிகள். பெரிய நம்பிகளின் திருமாளிகையின் பசுக்களை தினமும் மேய்க்கும் பணியிணை மேற்கொண்டார். இதென்ன விந்தை என மக்கள் நெக்குருகிப் பேசினர். அனுதினமும் அரங்கனை சேவித்தார். திருஆலவட்ட கைங்கர்யம் எனும் விசிறி வீசும் தொண்டுக்கு தன்னை அருளும்படி கேட்டுக் கொண்டார். வரதன் போலவே அரங்கனும் பேசினான். காவிரியின் குளிர் தென்றல் எமக்குப் போதுமானது, திருமலை வேங்கடனுக்கு வேண்டுமானால் ஆலவட்டச் சேவை செய்யேன் என்றான்.

திருவேங்கடத்திற்கு சென்று தன் திருவுளத்தை வெளிப்படுத்தினார். மேகங்கள் சூழப்பெற்று மெல்லிய தென்றல் எப்போது வீசிக் கொண்டிருப்பதால் ஆலவட்டக் கைங்கர்யம் தம்மை விட காஞ்சி வரதனுக்கே சரியாகும் என்றார். வேள்விக் குண்டத்திலிருந்து தோன்றிய தேவராஜனான வரதராஜனுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்வதே சரி என்று விளக்கினார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் திரும்பினார். தேவப் பெருமாளுக்கு விசிறி வீசி தொண்டு செய்தார். மறைந்திருந்த ஞானாக்னி விசிறியின் காற்றால் பிழம்பாக கனிந்தது. அவரின் அருகே வருவோரின் நெஞ்சத்து தணலை ஊதி ஊதி தணிவித்தார். வரதனின் விளையாட்டு லீலைகள் பலப்பல இவரின் மூலமும் தொடர்ந்தது. காஞ்சிபுரம் பெருமாளிடம் நேரடியாகப் பேசும் சிறப்பு பெற்றவர். ஸ்ரீ ராமானுஜ ருடைய வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை காஞ்சி புரம் வரதராஜரிடத்தில் கேட்டு ஆறு வார்த்தைகளை பதிலாக வாங்கி ஸ்ரீ ராமானுஜருடைய வாழ்க்கை பாதையை அமைத்துக் கொடுத்தவர். ஒரு வைணவன் எப்படிப்பட்ட நெறியோடும், மன நிலையோடும் இருக்க வேண்டும் என்பதை இவருடைய வாழ்க்கை தெள்ளத் தெளிவாக விளக்கும்.

தினமும் காஞ்சிக்குச் சென்று கைங்கர்யம் செய்துவந்த நம்பிகள், முதுமையின் கண் ஏற்பட்ட தாளாமைக் கண்டுவருந்தியிருக்க பெருமாள் இவருடைய இல்லத்திலேயே வைணவ திவ்ய தேசங்களில் முதன் மையாகப் போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கச்சி (காஞ்சி) ஆகிய தலங்களில் உறைகின்ற காட்சியும் கொடுத்து முக்தியும் அருளினார். சென்னைக்கு அருகே பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் வரதராஜப் பெருமாள் கோயிலில் இவருக்குச் சந்நதி உண்டு. அங்கு இவருடைய அவதார உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

Tags : Thirukkachchi Nambikals ,Sri ,Thirukkachchi ,Thirunatchathiram ,Pushpavalli ,Poonthanmalli ,
× RELATED திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்