×

ஏன்? எதற்கு ?எப்படி ?

?தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சுஇடுவது ஏன்?
– பி.கனகராஜ், மதுரை.

தாலிகட்டும்போது, மணமகன் சொல்லும் “மாங்கல்யம் தந்துநானேன’’ என்று துவங்கும் மந்திரத்திற்கான பொருள் என்னவென்றால், நீயும் நானும் இணைபிரியாமல் நூறாண்டு காலம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக, இந்த திருமாங்கல்யம் பூட்டிய கயிற்றினை உனது கழுத்தில் கட்டுகிறேன் என்பதாகும். இதை மந்திரம் என்று சொல்வதைவிட மணமகன் சொல்லும் உறுதிமொழி என்றே பொருள் கொள்ளலாம். அந்த திருமாங்கல்யத்தை தன்னுடைய கழுத்தில் ஏற்றுக் கொள்ளும் பெண்ணானவள் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் எப்பொழுதும் மனதில் உறுதியோடு தெய்வீக சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தன்னுடைய மனம், வாக்கு, செயல் என்ற மூன்றும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்க வேண்டும், அதாவது மனம் என்ன நினைக்கிறதோ அதையே வெளியில் சொல்ல வேண்டும், அப்படிச் சொன்ன சொல்லில் உள்ளபடியே நடந்தும் காட்ட வேண்டும் என்றும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை நாம் அடைய, அதாவது அறத்தின் வழியாக பொருளைத் தேடி அதன் மூலம் இன்பம் காண வேண்டும் என்பதற்காக பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் என்ற இந்த மூன்று மூர்த்திகளின் சாட்சியாகவும், மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூன்று தேவியர் சாட்சியாகவும், விண்ணவர் எனப்படும் தேவர்கள், முன்னவர் எனப்படும் முன்னோர்கள், மண்ணவர் எனப்படும் இந்த மண்ணுலகில் வாழும் பெற்றோர், உற்றார், உறவினர் அதாவது பூர்லோகம், புவர்லோகம் மற்றும் சுவர்லோகம் என்று அழைக்கப் படும் இந்த மூன்று உலகிலும் வாழ்வோர் சாட்சியாகவும் இந்த திருமாங்கல்யம் அடங்கிய கயிற்றினை உன் கழுத்தில் கட்டுகிறேன் என்பதற்காக அடையாளமே அந்த மூன்று முடிச்சு. நம்முடைய சாஸ்திர சம்ப்ரதாயங்கள் அனைத்துமே ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கியவை. இத்தனை சிறப்புகள் அந்த திருமாங்கல்யத்திற்கு இருப்பதால்தான் பெண்கள் அதனை தங்கள் உயிரினும் மேலானதாகக் கருதுகிறார்கள்.

?பரிகாரத்திற்காக தானம் செய்வது முறையாகுமா?
– டி.நரசிம்மராஜ், மதுரை.

தானம் என்பதே பலனை எதிர்பார்த்துச் செய்வதுதான். தர்மம் என்பதுதான் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் செய்வது. ஆக, எந்த ஒரு தானமும் ஏதோ ஒரு வகையில் தோஷநிவர்த்திக்கான பரிகாரம் ஆகவே சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, பித்ருதோஷம் நீங்க கோதானம் செய்வார்கள். நாம் வீட்டில் செய்யும் க்ருஹப்ரவேசம், திருமணம் முதலான நிகழ்வுகள், கணபதி ஹோமம் முதலான பூஜைகளின் போதுகூட நவகிரஹங்களின் தோஷம் நீங்குவதற்காக கிரஹப்ரீதி என்ற ஒரு தானத்தினைச் செய்வார்கள். ஆக தானம் என்பதே தோஷத்தை நீக்கும் பரிகாரம்தான். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?கிரிவலம் எத்தனை மாதங்களுக்குச் செல்ல வேண்டும்?
– வண்ணை கணேசன், சென்னை
சாப்பாடு எத்தனை நாட்களுக்குச் சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி. மனதிற்கு நிம்மதி தரும் கிரிவலத்தை, வாழ்நாள் முழுக்க மேற்கொள்ளலாமே. இது போக கிரிவலத்தினை மாதம் ஒருமுறைதான் செய்யவேண்டும் என்பதில்லை. அடியேனுக்குத் தெரிந்து,திருவண்ணாமலை தலத்தில் வாழ்ந்து வரும் ஒரு ஹோட்டல் அதிபர் தினந்தோறும் அதிகாலைப் பொழுதில் கிரிவலம் செல்வதை தன் வழக்கமாகக் கொண்டுள்ளார். கிரிவலம் வருவதற்கு எந்தவிதமான கணக்கும் இல்லை. நம் மனதிற்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் இறைவனின் அம்சமாகவே அமைந்திருக்கும் அந்த மலையை வலம் வருவதால், மனதில் தெளிவு பிறக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

?கேட்டை நட்சத்திரம் உள்ளவர்கள் எந்த கோயிலுக்குச் செல்வது நல்லது?
– த.நேரு, வெண்கரும்பூர்.

27 நட்சத்திரக்காரர்களும் எல்லா கோயில்களுக்கும் செல்லலாம். இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் இந்த கோயிலுக்குச் செல்வது நல்லது என்று சொல்வதெல்லாம் நம்முடைய கற்பனையே. இதுபோன்ற கருத்துக்களை சாஸ்திரம் ஏற்பதில்லை.

?திருமணத்திற்காக முகூர்த்த நேரங்கள் எதன் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன?
– த.சத்தியநாராயணன்,அயன்புரம்.

முகூர்த்த விதிகளை உள்ளடக்கிய சுபமுகூர்த்த நன்னாளில், திருமணத்திற்காக லக்னம் குறிக்கும்போது, முகூர்த்த லக்னத்தில் இருந்து ஸப்தம சுத்தி என்று அழைக்கப்படும் ஏழாம் இடம் என்பது எந்த கிரஹமும் இன்றி சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் எட்டாம் இடம் சுத்தியும் அவசியம் என்பார்கள். தவிர்க்க முடியாத சூழலில் இந்த ஏழு மற்றும் எட்டாம் வீட்டில் ஏதேனும் கிரஹங்கள் இருந்தால், அவற்றிற்கு ப்ரீதி செய்துவிட்டு முகூர்த்தத்தை நடத்த வேண்டும். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தைத் தவிர்ப்பது என்பது நம்முடைய வழக்கத்தில் உள்ளது.

?பிரதிஷ்டாபிஷேகம், வருஷாபிஷேகம் என்றால் என்ன?
– மல்லிகா அன்பழகன், சென்னை.

கும்பாபிஷேகம் நடந்த நாளை நினைவில் கொண்டு, வருடந்தோறும் அந்த நாளில் ஆலயத்தில் செய்யப்படுவதே இந்த வருஷாபிஷேகம். பிரதிஷ்டாபிஷேகம் என்றாலும் அதே பொருள்தான். இந்த நாளை ஆங்கில தேதியை அடிப் படையாகக் கொண்டு தீர்மானிக்கக் கூடாது. மனிதர்களின் பிறந்தநாளை எப்படி பிறந்தமாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திர நாளில் கொண்டாட வேண்டுமோ, அதே போல எந்த மாதத்தில் எந்த நட்சத்திர நாளில் கும்பாபிஷேகம் என்பது நடைபெற்றதோ, வருடந்தோறும் அதே மாதத்தில் வரும் அதே நட்சத்திரநாளில்தான், இந்த வருஷாபிஷேகம் என்பதையும் நடத்த வேண்டும்.

?மணி பிளான்ட் என்ற செடியை வீட்டில் வளர்ப்பதால் பயன் உண்டா?
– என்.இளங்கோவன்,மயிலாடுதுறை.

பயன் உண்டு. மணி பிளான்ட் என்பது குரோட்டன்ஸ் வகையைச் சார்ந்தது. இதனை வீட்டினில் வளர்ப்பதால், காற்றில் உள்ள நச்சு நீங்கி, சுத்தமான ஆக்சிஜன் என்பது கிடைக்கும். அந்த வகையில், வீட்டில் எந்தச் செடி அல்லது மரம் வளர்த்தாலும், நல்லதுதானே! மணி பிளான்ட்டை வீட்டில் வளர்ப்பதால், பணம் வந்து சேரும் என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.

?திருமணங்கள் ஏன் செவ்வாய், சனிக் கிழமைகளில் நடைபெறுவதில்லை?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

செவ்வாய் மற்றும் சனியை அசுப கிரஹங்களாக நம்மவர்கள் கருதுவதால், இந்த நாட்களில் திருமணத்தை நடத்துவதில்லை. இந்த வரிசையில் ஒரு சிலர், சூரியனையும் சேர்த்து அந்தச் சூரியனின் நாள் ஆகிய ஞாயிற்றுக்கிழமையிலும் திருமணத்தை நடத்தாமல் தவிர்ப்பார்கள். வட இந்திய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமையை மங்களவாரம் என்று அழைப்பதால், ஒரு சிலர் அந்த நாளிலும் திருமணத்தை நடத்துகிறார்கள்.

 

Tags : P. Kanakaraj ,Madurai ,
× RELATED திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்