திருப்போரூர்: திருப்போரூர் நகரப் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை 5 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் 100 சதவீத பணிகள் நிறைவடைந்து தற்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், புதுச்சேரி போன்ற இடங்களில் இருந்து வரும் ஆம்னி பஸ்கள், தொழிற்சாலை பணியாளர் வாகனங்கள், கல்லூரி வாகனங்கள் புறவழிச்சாலையில் செல்கின்றன. இதனால் திருப்போரூர் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது.
தற்போது திருப்போரூர் அருகே பல்வேறு கிராமங்களில் ஏரிகளை ஆழப்படுத்தி மண் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்து அகற்றப்படும் மண் பிரமாண்ட லாரிகள் மூலம் சென்னைப் புறநகர் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும், கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்படும் ஜல்லி, செங்கல், எம்சாண்ட், கருங்கற்கள் போன்றவற்றை எற்றிச் செல்லும் லாரிகளும் ஓ.எம்.ஆர். சாலையை பயன்படுத்தியே செல்கின்றன.
இதன் காரணமாக திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து காலவாக்கம் வரை மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி தார்ப்பாய் கொண்டு லாரியின் மேல்பகுதி மூடப்படாமல் செல்வதால் மண் கட்டிகள் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்துடனே மற்ற வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, திருப்போரூர் காவல்துறை நிர்வாகம் மண் எடுத்துச் செல்லும் லாரிகளை புறவழிச்சாலை வழியாக பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
