காஞ்சிபுரம் செவிலிமேட்டில் சாலையை ஆக்கிரமித்து டூவீலர் பார்க்கிங்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு சந்திப்பு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்து இடையூறாக டூவீலர்களை நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் செவிலிமேடு சந்திப்பு பகுதி வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து, வந்தவாசி, செய்யாறு, திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, சிதம்பரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும், காஞ்சிபுரம் அருகே செய்யாறு சிப்காட் பகுதிக்கு கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. காஞ்சிபுரத்தின் நுழைவாயில் பகுதியாக விளங்கும் செவிலிமேடு சந்திப்பு பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி சாலையோரங்களில் தனியார் நிறுவன பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். பரபரப்பான நேரங்களில் கனரக வாகனங்கள் மற்றும் தனியார் கம்பெனி பேருந்துகள் நகருக்குள் நுழைய அனுமதி இல்லாததால், செவிலிமேடு சந்திப்பு, ஓரிக்கை சந்திப்பு, பெரியார் நகர் வழியாக செல்கின்றன.

எனவே, தனியார் கம்பெனிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், சாலையோரத்தில் டூ வீலர்களை நிறுத்திவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. அருகில், சில மீட்டர் தூரத்தில் தனியார் பார்க்கிங் உள்ள நிலையில், சாலையோரத்தில் டூ வீலர்களை நிறுத்தி விட்டு செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. மேலும் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது, வாகனங்கள் கடந்து செல்ல வழியில்லாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியில் பணியில் இருந்த போலீசார் கூறுகையில், இப்பகுதியில் தனியார் கம்பெனி தொழிலாளர்கள் டூ வீலர்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், வாகன தணிக்கை செய்யும்போது, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். மேலும், இந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளோம். அதையும் மீறி தனியார் கம்பென்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். தொடர் அறிவுறுத்தல்களுக்கு பிறகும் இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: