மீண்டும் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3,760 அதிகரிப்பு: நகை பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15ஆயிரத்தை நெருங்கும் நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3,760 அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே ஒருவிதமான ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அமெரிக்க – ஈரான் இடையான பதற்றம், டிரம்பின் வரி விதிப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடைகள் காரணமாக ஒருவிதமான நிலையற்ற தன்மை உருவாகி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இது தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 21ம்தேதி தங்கம் கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680க்கும், பவுனுக்கு ரூ.2,080 அதிகரித்து ரூ.1,17,440 ரூபாய்க்கும் விற்பனையானது. 23ம்தேதி கிராம் ஒன்றுக்கு ரூ.180 அதிகரித்து ரூ.14,860க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கும் விற்பனையானது. 24ம்தேதி கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1,19,120க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், நேற்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,440-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3,760 அதிகரித்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: