சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்தது. இதேபோல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் எகிறியது. தங்கம் விலை கடந்த 2 வாரத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 19ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16,000க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது.
அதாவது, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,420க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 15,360க்கும் விற்றது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.270க்கும், பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680க்கும், பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,440க்கும் விற்பனையானது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
வார இறுதி நாளில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
