எஸ்ஐ தேர்வு முடிவை வெளியிட வேண்டாம்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: எஸ்ஐ தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம் என ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. தென்காசியைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் காலியாகவுள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டிச. 21ல் நடத்தியது. ஏ பிரிவில், தமிழ் பகுதி தேர்வு வினாக்கள் இடம் பெற்றிருந்த நிலையில், பி பிரிவில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டிருந்த படி தமிழ் வினாக்கள் இல்லை. அதற்கு பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தன.

இதனால், பலரது வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எஸ்ஐ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிப்பதோடு, தேர்வை ரத்து செய்து மீண்டும் புதிதாக தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘தேர்வுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும் என தேர்வர்கள் தங்களை படித்து தயார் படுத்துகின்றனர். ஆனால், தமிழில் இருந்து ஒரு வினா கூட கேட்கப்படவில்லை என்றால் எப்படி’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்திலும் இருந்து வினாக்களை கேட்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது’ என்றார். அப்போது நீதிபதி, ‘‘ஒரு மதிப்பெண் கூட முடிவை மாற்றலாம். 10 நாட்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டாம்’’ என அறிவுறுத்தி மனுக்களின் மீது உரிய தீர்ப்பளிப்பதாகக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Stories: