×

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை: ஒரே வாக்காளர் பட்டியல் குறித்து முக்கிய முடிவு

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. தலைநகர் ெடல்லி பாரத் மண்டபத்தில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த 1999ம் ஆண்டிற்குப் பின் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கூடிய கூட்டம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தேர்தல் ஆணையர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் ‘ஒரே வாக்காளர் பட்டியல்’ முறையை அமல்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்துத் தேர்தல்களுக்கும் ஒரே பட்டியலை பயன்படுத்துவதன் மூலம் குளறுபடிகளைத் தவிர்க்க முடியும் என விவாதிக்கப்பட்டது. மேலும் தேர்தல் பணிகளை எளிதாக்க வடிவமைக்கப்பட்டுள்ள ‘இசினெட்’ என்ற டிஜிட்டல் தளம் குறித்து அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டதோடு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ம் ஆண்டின் கீழ் உள்ள சட்ட நடைமுறைகளை ஒருங்கிணைப்பது குறித்தும் பேசப்பட்டது. தேர்தல்களை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்த தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய தலைமைத் தேர்தல் ஆணையர், ‘ஜனநாயகத்தின் வேர்களைப் பலப்படுத்த தேர்தல் ஆணையங்கள் இடையே ஒற்றுமை அவசியமாகும்’ என்று தனது உரையை நிறைவு செய்தார். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்தும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்தும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Tags : Chief Election Commission ,Delhi ,New Delhi ,Election Commission of India and ,State Election Commissioners ,Bharat Mandapam ,Election Commission of India ,
× RELATED இன்று காலை ‘லே’ நோக்கிச் சென்ற போது...