×

சட்டையை கழற்றி போராட்டம் நடத்திய சம்பவம்; இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் கைது: டெல்லி போலீசார் நடவடிக்கை

புதுடெல்லி: பாரத் மண்டபத்தில் சட்டை கழற்றி போராட்டம் நடத்திய விவகாரத்தில் இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கைதானார். கடந்த 20ம் தேதி டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், இணையதளம் வழியாக பெறப்பட்ட க்யூஆர் குறியீடுகளை பயன்படுத்தி சுமார் 10 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள அரங்கில் அவர்கள் திடீரென சட்டைகளை கழற்றி எறிந்துவிட்டு, பிரதமர் மோடி மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய சட்டைகளை அணிந்து போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக குவாலியர் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த இந்த செயலை பாஜகவை சேர்ந்த ஒன்றிய அரசு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 20 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய பானு சிப்பை இன்று அதிகாலை 4.30 மணி அளவில் டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவர் மீது குற்றச்சதி மற்றும் சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடந்த இளைஞர் போராட்டங்களை போன்று சதி திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்தும், போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சட்டைகள் அச்சடிக்க பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‘ஜனநாயக ரீதியான போராட்டத்தை நசுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள இந்த கைது சட்டவிரோதமானது’ என்று தெரிவித்தனர்.

Tags : Youth Congress ,national president ,Delhi Police ,New Delhi ,All India ,President ,Bharat Mandapam ,Artificial Intelligence Summit ,Delhi ,
× RELATED இன்று காலை ‘லே’ நோக்கிச் சென்ற போது...