டெல்லி: மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்பார்வையிட பிற மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வரும் சூழலில், இந்த விவகாரத்தில் மம்தா அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே மோதல் தொடர்கிறது. இது தொடர்பாக மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனிடையே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீதிபதிகளை வைத்து பணிகளை மேற்கொண்டால் மேலும் 80 நாட்கள் பிடிக்கும்.
50 லட்சம் விண்ணப்பங்களை பரிசீலிக்க 250 நீதிபதிகளே உள்ளனர். ஒரு நீதிபதி நாள் ஒன்றுக்கு 250 விண்ணப்பங்களை பரிசீலித்தால் பணியை முடிக்க 80 நாட்கள் தேவைப்படும் என உச்ச நீதிமன்றத்துக்கு கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்பார்வையிட பிற மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநில நீதிபதிகளை பணியில் அமர்த்துமாறு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பிப்.14ம் தேதி வரை ஆவணங்களுடன் சமர்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். பிப்.28ம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவேளை எஸ்.ஐ.ஆர். சரிபார்ப்பு முடியாவிட்டால் இறுதி பட்டியலுக்கு பிறகு கூடுதல் பட்டியலை வெளியிடலாம் என்றும்கூறியுள்ளது. எஸ்ஐஆர் பணிகள் தாமதம் ஆவதால் மேற்கு வங்க தேர்தல் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை 5 மாநில தேர்தலுடன் அறிவிக்கப்பட்டாலும் கடைசி கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
