பழநி, பிப். 8: பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கௌரவத் தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார், தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், செயலர் மற்றும் ஆணையருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தினசரி இரவு 7 மணிக்கு பக்தர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி தங்கரத சுவாமி புறப்பாடு செய்து வருவது நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் தங்கரத சுவாமி புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 2021 தைப்பூசத் திருவிழாவின் 5ம் நாளில் கோயில் நிர்வாகம் சார்பில் தங்கரத சுவாமி புறப்பாடு நடந்தது.
கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி நாள்தோறும் தங்கரத புறப்பாடு நடைபெற உத்தரவிட வேண்டும். இதுபோல், பழநி மலைக்கோயிலில் உள்ள மூலவருக்கு தினசரி 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. இப்பூஜைகள் கலந்து கொள்ள திருக்கோயிலில் முதலீடு செய்து கட்டளைதாரர்கள் விரும்பும் நாளில் சுவாமியை தரிசனம் செய்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு வருவது நடைமுறையில் உள்ளன. கொரோனா காரணமாக தற்போது 6 கால பூஜைகள் கட்டளைதாரர்களையோ, காலபூஜை டிக்கெட் பெறுபவர்களையோ தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மலைக்கோயிலில் நடைபெறும் 6 கால பூஜைகளில் கட்டளைதாரர்களை அனுமதிக்க உத்தரவு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.