ஈரோடு: திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஈரோடு திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலில் ராஜகோபுரம், சிவன் மற்றும் அம்மன் சந்நிதிகள், பரிவார சந்நிதிகள், புதிய நுழைவாயில் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 16-ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதனையடுத்து தினமும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று காலை 6 காலயாக பூஜைக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீவேலாயுதசுவாமி, அபிராமி அம்மன் உடனமர் அமிர்த கடேஸ்வரர், மூலஸ்தான விமானம், பரிவார விமானம், ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் வழிபட்டனர். விழாவில், அமைச்சர்கள் சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, எம்எல்ஏ-க்கள் வி.சி.சந்திரகுமார், சரஸ்வதி, அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எஸ்.பி. சுஜாதா தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் 207 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று ரூ.18 கோடி மதிப்பில் 207 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
