பொள்ளாச்சியில் ரூ.9.89 கோடியில் புதிய பேருந்து நிலையம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சிடிசி மேட்டில் ரூ.9.39 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்து என தினமும் சுமார் 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயணிகளுக்கு வசதியாகவும் கூடுதல் பேருந்து நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சிடிசி மேடு பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், ரூ.9.89 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்டது.

இதில் நகராட்சி உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பல்வேறு வசதிகளுடன் பயணிகள் நிழற்கூரையும், வர்த்தகம் சம்பந்தமாக கடைகள், பயணிகளுக்கு கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டு பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இந்த பேருந்து நிலைய முன்பகுதியில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள், விவசாயம் சார்ந்த இயற்கை காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. தற்போது கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று காலை (22ம் தேதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். இதேபோல், மகாலிங்கபுரத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட, பாராளுமன்ற தொகுதி புதிய கட்டிடத்தையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் என்ற பெயரில் மாற்றப்பட்ட சாலையையும் திறந்து வைத்தார்.

இவ்விழாக்களுக்கு எம்பி., ஈஸ்வரசாமி, நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: