வேளாண் இயந்திரங்களை எளிதில் வாடகைக்கு பெற ரூ.37.88 லட்சத்தில் இ-வாடகை 2.0 ஆன்லைன் கைப்பேசி செயலி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை விவசாயிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வாடகைக்கு பயன்படுத்திடும் வகையில், ஏற்கனவே இ-வாடகை ஆன்லைன் கைப்பேசி செயலி பயன்பாட்டில் உள்ளது. இதனை மேம்படுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் எளிதில் வாடகைக்கு பெற்று பயன்பெறும் வகையில் “இ-வாடகை 2.0” என்ற மேம்படுத்தப்பட்ட இ-வாடகை ஆன்லைன் கைப்பேசி செயலி ரூ.37.88 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாடகைக்கு எடுப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை அதிகரித்தல் ஆகியவற்றை இச்செயலி முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளம், உழவர் செயலியுடன் ஒருங்கிணைக்கப் படுவதால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்களை தேவையான நேரத்தில் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய இயலும்.

இடைத்தரகர்களின் தேவையின்றி சேவைகள் வழங்கப்படுவதால், கூடுதல் செலவுகள் குறைக்கப்படுகின்றன. குறிப்பாக உழவு, விதைப்பு, அறுவடை போன்ற முக்கிய காலகட்டங்களில் வேளாண் இயந்திரங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்வதன் மூலம், விவசாயப் பணிகள் தங்குதடையின்றி நடைபெற உதவுகிறது. இ-வாடகை 2.0 செயலியில், வேளாண்மைப் பொறியியல் துறையானது, விவசாயிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் அல்லது தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல்படும்.

இச்செயலியில் இதுவரை, 892 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 5952 தனியார் வேளாண் இயந்திர உரிமையாளர்கள் என மொத்தம் 6844 சேவை வழங்குநர்கள், 9359 வேளாண் இயந்திரங்களையும் 6780 கருவிகளையும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக பதிவு செய்துள்ளனர். இ-வாடகை 2.0 கைப்பேசி செயலியை தர்மபுரி விற்பனைக்குழு அலுவலகம், மதிகோண்பாளையத்தில் விவசாயிகள் முன்னிலையில் நேற்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

Related Stories: