மும்பை: சர்வதேச தடைகளை மீறி ஈரானிய எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட மூன்று கப்பல்களை இந்திய கடலோர காவல்படை அதிரடியாக பறிமுதல் செய்தது. சர்வதேச அளவில் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தகர்க்கும் நோக்கில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி எரிபொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல்கள் குறித்து உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. குறிப்பாக கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்தில் போலி காப்பீடு சான்றிதழ் மூலமும், குஜராத்தின் அலங் கப்பல் உடைக்கும் தளத்தில் போலி ஆவணங்கள் மூலமும் சில கப்பல்கள் நுழைய முயன்ற சம்பவங்கள் முன்கூட்டியே நடந்திருந்தன. இந்த நிலையில், கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை பாகிஸ்தான் கடல் பகுதியில் முகாமிட்டிருந்த மாலி நாட்டு கொடி ஏந்திய ‘எம்.டி அஸ்பால்ட் ஸ்டார்’ என்ற கப்பல், தனது இருப்பிடத்தை மறைக்க கண்காணிப்பு கருவிகளை 11 மணி நேரம் அணைத்து வைத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
இதனைத் தொடர்ந்து மும்பை கடற்கரையிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் பதுங்கியிருந்த அந்த கப்பலை, கடந்த 5ம் தேதி அதிகாலை 6 மணிக்கு இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சுற்றி வளைத்து அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அந்த கப்பல், ‘எம்.டி அல் ஜப்சியா’ மற்றும் ‘எம்.டி ஸ்டெல்லர் ரூபி’ ஆகிய தனது மற்ற இரு கப்பல்களுடன் இணைந்து இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி 30 மெட்ரிக் டன் எரிபொருள் மற்றும் 5,473 மெட்ரிக் டன் பிடுமன் ஆகியவற்றை மாற்றிக் கொண்டது அம்பலமானது. இதுதொடர்பாக கப்பல் மாலுமிகள் மற்றும் இன்ஜின் வல்லுநர்கள் உட்பட 9 பேர் மீது மும்பை எல்லோ கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கப்பல் கேப்டனின் செல்போன் உரையாடல்கள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள மூன்று கப்பல்களும் மும்பை கடற்பகுதியில் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு, கடத்தல் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
