காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை அழைத்து சென்ற வாலிபர் போக்சோவில் கைது

சேத்தியாத்தோப்பு, பிப். 20: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் கல்லூரிக்கு சென்ற தனது 17 வயது மகளை காணவில்லை என அவரது தந்தை சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டதால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என ஆட்கொணர்வு வழக்கும் தொடுத்தார். இந்நிலையில் இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரரின் மகளை 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், சேத்தியாத்தோப்பு போலீசார் மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்ற கார்குடல் பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் சூரியா(26) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மாணவியை மீட்டனர். 24 மணி நேரத்தில் கல்லூரி மாணவியை கண்டுபிடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கல்லூரி மாணவி தனது பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து கல்லூரி மாணவியை அழைத்து சென்றதாக போக்சோவில் கைது செய்யப்பட்ட சூர்யாவை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: