- நெதர்லாந்து
- கேப்டன் சூர்யகுமார்
- அகமதாபாத்
- இந்தியா
- லீக் போட்டியில்
- 10 வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்க
அகமதாபாத்: 20 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 38வது லீக் போட்டியில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் எடுத்தது. ஷிவம் துபே 66, சூர்யகுமார் 34, திலக்வர்மா 31, ஹர்திக் பாண்டியா 30 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய நெதர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களே எடுத்தது. இதனால் 17 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.இந்திய பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி 3, ஷிவம் துபே 2 விக்கெட் எடுத்தனர். துபே ஆட்டநாயகன் விருது பெற்றார். லீக் சுற்றில் 4 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: முதலில் பேட் செய்ய விரும்பினோம். 190 ரன்களுக்கு மேல் அடித்தோம். நாங்கள் பந்துவீசும்போது பனிப்பொழிவு இருந்தது. இதனால் பவுலர்களுக்கு பந்துவீச கூடுதல் சவாலாக இருந்தது.
சூப்பர் 8 சுற்றில் இதேபோல் ஆரம்பத்தில் விக்கெட் இழந்து தடுமாறலாம். இதனால் அனைத்து வீரர்களுமே பொறுப்புகளை உணர்ந்து ஆடுவது மிகவும் முக்கியம். ஷிவம் துபே நியூசிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் ஆடியதுபோல் இன்றும் ஆடினார். ஆட்டநாயகன் விருது வாங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். யாருக்கு பவுலிங் தருவது என்ற குழப்பம், தலைவலி எனக்கு கண்டிப்பாக இருக்கும். ஆடுகளம் என்ன மாதிரி இருக்கிறதோ, அதற்கு ஏற்ப நான் பந்துவீச்சு முறையை மாற்றுவேன். அணி நல்ல நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் வெற்றிக்கு பங்களிக்கிறார்கள். ஒன்று அல்லது 2 வீரர்களுக்கு சிறந்த நாளாக அமைகிறது. ஆனால் எனக்கு அனைவரும் வெற்றிக்காக பங்களிக்க வேண்டும், என்றார். இந்தியா அடுத்ததாக சூப்பர் 8 சுற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் தென்ஆப்ரிக்காவுடன் மோத உள்ளது.
சிக்சர் அடிப்பது மிகவும் பிடிக்கும்! ஆட்டநாயகன் ஷிவம் துபே கூறியதாவது: “ஆடுகளம் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. பந்து தாழ்வாகவும், திரும்பியும் வந்தது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் பேட் செய்வது மிகவும் பிடிக்கும். நான் ரசித்து விளையாடினேன். சிக்சர் அடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் எல்லா பந்திலும் சிக்சர் அடிக்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப பவுண்டரிகளையும் அடிக்க பழகிக்கொள்ள வேண்டும். பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கிறது’’ என்றார்.
