- துபாய் ஓபன் டென்னிஸ்
- மீரா ஆண்ட்ரீவா
- துபாய்
- துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
- துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
துபாய்: துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் நேற்று, ரஷ்ய இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். துபாயில், துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா (18), ரோமன் வீராங்கனை ஜாக்குலின் அடினா கிறிஸ்டியன் மோதினர். முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதியபோதும், கடைசியில் அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் ஆண்ட்ரீவா வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சுதாரித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.
அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா (24), இந்தோனேஷியா வீராங்கனை ஜேனிஸ் ஜென் (23) மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதல் அதிரடி காட்டிய அமண்டா, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இன்னொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் ஜெஸிகா பெகுலா (31), இவா ஜோவிக் (18) களம் கண்டனர். இப்போட்டியின் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜெஸிகா, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி கண்டு காலிறுதிக்குள் நுழைந்தார். இன்று நடக்கும் காலிறுதியில் மிரா ஆண்ட்ரீவா – அமண்டா அனிசிமோவா மோதவுள்ளனர்.
