×

கூடலூர் அருகே அட்டகாசம் வீட்டின் ஒரு புற சுவரை இடித்து மறுபுறம் வெளியேறிய காட்டு யானை

கூடலூர், பிப்.14: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது புளியம்பாறை. இங்குள்ள புளியம்வயல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (50). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்த பகுதிக்கு யானை கூட்டம் வந்தது. அதில் ஒரு யானை விஜயகுமாரின் வீட்டின் முன் பக்க சுவற்றை இடித்து மறுபுறம் வெளியே சென்றது. இதனால், ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் இடிந்து விழுந்தன. இதில், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன.

மற்ற யானைகள் தங்கள் பங்கிற்கு வீட்டின் ஜன்னல், கதவுகளை உடைத்து நொறுக்கியது. விஜயகுமார் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,“யானைகளுக்கு அபார ஞாபக சக்தி உள்ளது. அதன் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் வந்தாலும் ஆத்திரமடையும் யானை அதனை இடித்து தள்ளிவிடும். விஜயகுமாரின் வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

 

Tags : Gudalur ,Puliyamparai ,Nilgiris district ,Vijayakumar ,Puliyamvayal ,
× RELATED கோத்தகிரி அருகே குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்