×

காங்கிரஸ் புது பிளான்: கேரளாவுக்கு டீம் ராகுல் அசாமுக்கு டீம் பிரியங்கா

பா.ஜ தற்போது சொல்லி வருவது போல் காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் அணி அல்லது பிரியங்கா அணி என்று எதுவும் இல்லை. இருவரும் ஒருமித்தே செயல்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருவரும் ஒரு வித்தியாசமான நடைமுறையை மேற்கொண்டு இருக்கிறார்கள். அசாம் மாநிலத்தில் பிரியங்கா காந்தியின் டீம் களமிறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ராகுல் காந்தியின் டீம் களம் இறக்கப்பட்டுள்ளது. அசாம் தேர்தலில் 126 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் பிரியங்காகாந்தி. அவருக்கு உதவி செய்ய கர்நாடகா துணைமுதல்வர் டி.கே. சிவகுமார், சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் உள்ளனர். மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரியங்காவுடன் நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

இன்னொரு பக்கம் கேரளாவில் சச்சின் பைலட், சசிதரூர் களம் இறக்கப்பட்டுள்ளனர். ராகுலுடன் முரண்பட்டு நின்ற அவர், சமீபத்தில் கார்கே, ராகுல் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அப்படியே ராகுல் பக்கம் இணைந்துள்ளார். மேலும் கர்நாடக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், ராஜ்யசபா எம்.பி. இம்ரான் பிரதாப்கர்ஹி மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த கன்கயா குமார் ஆகியோர் கேரள தேர்தலுக்கான பிற பார்வையாளர்களாக உள்ளனர். இந்த அணியை கே.சி.வேணுகோபால் இயக்குகிறார். ரமேஷ் சென்னிதலா கேரள முதல்வர் பதவிக்கு ஒரு வலுவான போட்டியாளராக இருந்தாலும், கே.சி.வேணுகோபாலும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதாக ஒரு பேச்சு எழுந்து இருக்கிறது. இந்த டீம்களின் வெற்றி, தோல்வி 5 மாநில தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.

* புதுச்சேரியிலும் ரூ.5000!
தமிழ்நாட்டில், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்களில் செலுத்தப்பட்டது. இதுபோல் புதுவையிலும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளாராம். ஆனால் நிதி இல்லாமல் தவிக்கிறாராம். தமிழ்நாட்டில் கடந்த மாதம் பொங்கலுக்கு முன்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. அப்போது புதுவையில் ரூ.5 ஆயிரம் போடலாம் என கோப்புகள், தலைமை செயலகம் மூலமாக கவர்னருக்கு அனுப்பப்பட்டதாம். பல்வேறு காரணங்களை மேற்கொள் காட்டி கவர்னர் மாளிகை திருப்பி அனுப்பியதாம்.

பின்னர் ரங்கசாமி மற்றும் மாநில பாஜ தலைவர்கள், கவர்னரை நேரில் சந்தித்து நிதி வழங்க வலியுறுத்தப்பட்டது. கவர்னரும், ஒன்றிய நிதியமைச்சரிடம் பேசி பல்வேறு போராட்டத்துக்கு பிறகு போகிப்பண்டிகை இரவு தான் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதுபோல், புதுவையில் 3.69 லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் போட முடியவில்லை என பாஜ தலைவர்களிடம் ரங்கசாமி புலம்பி வருகிறாராம். முதல்வர் ரங்கசாமி, விரைவில் டெல்லிக்கு சென்று நிதியமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளாராம் அப்போது, தனது சிறப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலில் நாம் போணி ஆவது கஷ்டம் என கூறப்போகிறாராம். இந்த பிரச்னை தான் புதுவை அரசியலில் கடுமையாக எதிரொலிக்கிறதாம்.

* ஒண்ணு இல்லன்னா ரெண்டு போதும்… அசாம் கட்சிகள் ஒருமித்த குரல்
அசாம் மாநிலத்தில் தலைமைத்தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைமையில் முழு தேர்தல் ஆணைய குழு சென்று ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று 2ஆம் நாளாக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளிலும் ஒரே கட்ட தேர்தல் நடத்த வேண்டும் அல்லது இரண்டு கட்டமாக நடத்தலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஏப்.14 மற்றும் 15ஆம் தேதிகளில் பிகு திருவிழா நடக்கிறது. அதன்பிறகு அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்று தேர்தல் கமிஷனர்கள் அசாம் தேர்தல் ஆய்வு குறித்து விளக்கம் அளிக்கிறார்கள்.

* பா.ஜ உத்தரவுல அட்டூழியம் பண்றாங்க… தேர்தல் கமிஷன் அல்ல அது… துக்ளக் கமிஷன்
மேற்குவங்க முதல்வர் மம்தா நேற்று தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் மற்றும் அடால்ப் ஹிட்லருடன் இணையாக, தேர்தல் ஆணையம் மேற்குவங்க வாக்காளர்களை சித்ரவதை செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் விதிகளை மீறி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறுகிறது. மேற்குவங்கத்தில் 160 பேர் பலிக்கு எஸ்ஐஆர் பணி தான் காரணம். எனவே இது தேர்தல் கமிஷன் அல்ல. இது ஒரு சித்ரவதை கமிஷன். அவர்கள் துக்ளக்கைப் போல நடந்து கொள்கிறார்கள், ஹிட்லரைப் போல அட்டூழியங்களைச் செய்கிறார்கள். எனது கேள்வி என்னவென்றால், மக்கள் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களா, அல்லது ஒரு அரசியல் கட்சியின் சார்பாக செயல்படும் துக்ளக் கமிஷனா?

அரியானா, பீகார் மற்றும் மகாராஷ்டிராவிலும் புகார்கள் இருந்தன. தற்போது, ஏன் மேற்குவங்கத்தை குறிவைக்கிறார்கள்? பாஜவை மகிழ்விப்பதற்காகவே தேர்தல் ஆணையம் இதையெல்லாம் செய்கிறது. பீகார் போன்ற பிற மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மேற்குவங்கத்தில் நிராகரிக்கப்படுகிறது. இந்த நிராகரிப்பு மேற்குவங்கத்தில் ஏன் நடக்கிறது? நாங்கள் முற்றிலும் இருளில் இருக்கிறோம். அவர்கள் ஒளிந்து விளையாடுகிறார்கள். இந்த நாடு அதிபர் ஆட்சி முறை நோக்கி நகருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் இறுதி எச்சரிக்கையின் பேரில், மேற்கு வங்க அரசு நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்ட 5 மாநில அரசு ஊழியர்கள் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு 6 மாதங்களுக்கு பிறகு இந்த நடவடிக்கையை மம்தா அரசு மேற்கொண்டுள்ளது.

Tags : Congress ,Rahul ,Kerala ,Priyanka ,Assam ,BJP ,Tamil Nadu ,West Bengal ,Puducherry… ,
× RELATED மார்ச் 15 (அ) 16ல் தேர்தல் தேதி அறிவிப்பு?