×

வெளியில் யாரும் பேசக்கூடாது: கூட்டணி குறித்து தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும்; காங்கிரஸ் மேலிடம் வாய் பூட்டு

காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் அழைப்புக்காக காத்திருக்கிறோம். கூட்டணி, அதிகார பகிர்வு உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் 5 பேர் கொண்ட கமிட்டி பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கையை, கட்சி மேலிடத்திற்கு தெரிவிப்போம். கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும். அதுவரை யாரும் கூட்டணி தொடர்பாக, விவரங்களை வெளியில் பேசக்கூடாது. கூட்டணியில் எந்தவித பிரச்னைகளும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள். பகுத்தறிந்தவர்கள், மதசார்பற்றவர்கள். பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஏற்க மாட்டார்கள். தொண்டர்களின் கருத்துகள், கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும். அதிகார பகிர்வு உள்பட எல்லாம் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலானது. அதுபற்றி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* கே.சி.வேணுகோபாலுக்கு கார் ஓட்டிய செல்வப்பெருந்தகை
சென்னை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட ஏராளமான காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்திலிருந்து, கே.சி.வேணுகோபால் புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டு சென்றார். அந்த காரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஓட்டிச் சென்றார். புதுச்சேரியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற கே.சி.வேணுகோபாலை, நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கூட்டணி குறித்து நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பதிலளிக்காமல் சிரித்து கொண்டே காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

Tags : Congress ,Krish Sodankar ,Congress Party ,Chennai ,Delhi ,Chennai airport ,Dimukhin ,
× RELATED மார்ச் 15 (அ) 16ல் தேர்தல் தேதி அறிவிப்பு?