இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க கூட்டம் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொதுக்கூட்டம், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு நடவடிக்கையால், இன்று உணவு உற்பத்தி, முக்கிய தொழில் பாதிப்பு, காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறுவது வேடிக்கையாக உள்ளது. பாஜ மற்றும் அதிமுகவை பற்றி விஜய் பேச மறுத்து வருகிறார். விஜய் படப்பிடிப்பு நடந்த இடத்தில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அதே போல், சமீபத்தில் தலைமை செயலகம் வந்த போது, எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், தேர்தல் பரப்புரையில் மட்டும் பெரிய அளவிலான பிரச்னைகள் ஏற்படுகிறது.
தமிழக அரசியலில் நீர்க்குமிழியாக மட்டுமே நடிகர் விஜய் இருப்பார். நீர்க்குமிழி தோன்றும் போது அழகாக இருக்கும். ஆனால், ஓரிரு நிமிடங்களிலேயே அது மறைந்து போகும். இந்த தேர்தலில் தவெக முழுமையாக தோற்கடிக்கப்படும். தமிழக அரசியலில் விஜயால் நிரந்தரமான இடத்தை பிடிக்க முடியாது. தமிழக மக்கள் முன்னேற்றத்திற்கான எந்தவொரு மாற்று திட்டத்தையும் விஜய் அறிவிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
