கட்சி அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளராக மனுத்தாக்கல்; தஞ்சை பாஜ மாவட்ட துணை தலைவர் நீக்கம்: நயினார் அதிரடி

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. மீதம் உள்ள 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதி தவிர மற்ற 7 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால், பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

பல கோஷ்டி பூசல் காரணமாக நீண்ட இழுபறிக்கு பின் 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மதியம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் கடந்த 30ம் தேதி மாவட்ட பாஜ துணை தலைவராக இருந்த முரளிதரன் என்பவர் சுயேச்சையாக மனுதாக்கல் செய்தார். அதோடு தனது பிரசாரத்தையும் தொடங்கினார். தஞ்சையில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாஜ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்னதாகவே முரளிதரன் மனுதாக்கல் செய்ததோடு பிரசாரத்திலும் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தஞ்சை தெற்கு மாவட்ட பாஜ துணை தலைவர் முரளிதரனை கட்சியில் இருந்து நீக்குவதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவராக இருந்த முரளிதரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். எனவே கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் முரளிதரனிடம் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* சுயேச்சையாக போட்டி
பாஜ.வில் இருந்து நீக்கப்பட்ட முரளிதரன் கூறும்போது, ‘‘தஞ்சை தொகுதிக்கு என்னை வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கினேன். ஆனால் என்னை கட்சியில் இருந்து தலைமையிடம் நீக்கிவிட்டது. கட்சி தலைமை முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இருந்தாலும் பாஜ வேட்பாளர் பட்டியில் வெளிவந்த பிறகு என் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்கு முன்பே நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது. இருந்தாலும் நான் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி’’ என்றார்.

Related Stories: