மாஜி பெண் எம்பியின் இடுப்பை கிள்ளியவருக்கு சீட் கொடுத்துடுச்சு பாஜ; எந்த முகத்துடன் ஓட்டு கேட்பது என  அதிமுகவினர் கொந்தளிப்பு: வைரலாகும் பழைய வீடியோ

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி, தேஜ கூட்டணியில் இம்முறை பாஜவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் சிவகங்கையில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. மற்ற மூன்றையும் கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட்டதால், அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் நீண்ட இழுபறிக்கு பின் மானாமதுரை தனி தொகுதி பாஜ வேட்பாளராக பரமக்குடியை சேர்ந்த பொன் பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஒரு விழாவில், பாஜ கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அப்போது பாஜ மாநில துணைத்தலைவராக இருந்த அதிமுக முன்னாள் பெண் எம்பி ஒருவரும் பங்கேற்றார். மேலும், கூட்டத்தில் அப்ேபாதைய மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது பொன் பாலகணபதி, பெண் மாஜி எம்பியின் இடுப்பை கிள்ளியதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வீடியோவும் வலைத்தளங்களில் வைரலானது.

அப்போது, பெண் மாஜி எம்பியின் கணவர், தூத்துக்குடி எஸ்பியிடம் இ-மெயில் மூலமாகப் புகார் கொடுத்தார். அதில், சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய இடத்தில் என் மனைவி இருக்கிறார். அன்றைய நிகழ்வில், பாஜ சார்பில் ஒரேயொரு பெண் நிர்வாகியாக என் மனைவி பங்கேற்றார். கூட்டம் அதிகமாக இருந்ததாலும், அந்தக் கூட்ட நெரிசலைச் சமாளிக்க முடியாத நிலையிலும் நின்றுகொண்டிருந்தார். அந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்ட பொன் பாலகணபதி, என் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார்.

என் மனைவியின் சேலையையும், உடலின் பல பகுதிகளிலும் தொடுதல் முயற்சியில் ஈடுபட்டார். இதை கவனித்த என் மனைவி, அவரின் கையைத் தட்டிவிட்டு, தவிர்த்திருக்கிறார். ஆனாலும், அவர் தொடர்ந்து தவறாக நடக்க முயன்றிருக்கிறார். இந்தச் செயலால் என் மனைவி மட்டுமல்லாமல் என் குடும்பத்தினரும் மன உளைச்சலில் ஆளாகியிருக்கிறோம்.

எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு தன் தரப்பில் பல மறுப்புகளை பொன் பாலகணபதி வெளியிட்டு வந்தார். காலப்போக்கில் இந்த சம்பவங்கள் மறைந்திருந்த சூழலில், தற்போது இவர் மானாமதுரை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அந்த வீடியோக்கள் மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த அதிமுகவினர் மானாமதுரை சட்டமன்ற தொகுதியை ஆறு முறை வென்ற அதிமுகவிற்கு ஒதுக்காமல், பாஜவிற்கு கொடுத்து சொந்த கட்சியினருக்கு எடப்பாடி துரோகம் இழைத்துவிட்டார். இடுப்பை கிள்ளியவருக்கு எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஓட்டு கேட்டு செல்வது என்று அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.

Related Stories: