ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு பொருந்தாது: மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

 

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் ப.அப்துல்சமது எம்எல்ஏ, பொருளாளர் கோவை உமர், தமுமுக பொருளாளர் சபியுல்லாகான், துணைத்தலைவர் பி.எஸ்.ஹமீது, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், தஞ்சை பாதுஷா, மைதீன் சேட்கான், சலீமுல்லா கான், தலைமை நிலைய செயலாளர் ஐ.அமீன் அஹமத், மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் எஸ்.ஏ.ஷேக்முகமது அலி உள்ளிட்ட பொதுக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அளித்த ேபட்டி: திமுக ஆட்சி தொடர வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக மமகவினர் களத்தில் உற்சாகமாக செயல்படுவார்கள். இதுவரை இல்லாத நிகழ்வாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையின மக்களான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சிறுபான்மையினர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கு திமுக அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட 5 தொகுதிகளை வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் 3 தொகுதிகள் கேட்டோம். திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் வழங்கினார்கள். இந்த முறை ஐந்து தொகுதிகளை கேட்கிறோம். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: