கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் சங்கராபுரம், சின்னசேலம், வடக்கநந்தல் ஆகிய பேருராட்சிகள், 21 ஊராட்சிகள் என சுமார் 150 கிராமங்களை உள்ளடக்கியது. கோமுகி அணை, மணிமுத்தாறு அணை உள்ளது. விவசாயம் நிறைந்த பகுதியாகும். நீர்வளம் அதிகம் இருப்பதால் நெல், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி பயிர்கள் அதிகளவில் விளைகிறது. கச்சிராயபாளையம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய இடங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைகின்றனர். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன், 1,19,487 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக ராஜா 74,702 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
மற்ற அனைவருமே டெபாசிட் இழந்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் பாமக (அன்புமணி) இடம்பெற்றுள்ள நிலையில் வன்னியர்கள் நிறைந்த இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட பாமக விரும்புகிறது. ஆனால் பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவை சுட்டிக்காட்டி மீண்டும் அதிமுக போட்டியிட விரும்புகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சரான மோகன், மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் இலை, மாம்பழ கட்சிகளுக்கு இடையே இப்போதே சீட் உரசல் ஆரம்பித்து விட்டது.
ஏற்கனவே இங்கு அமைச்சராக இருந்த மோகன், பெரிதளவில் திட்டங்களை நிறைவேற்றாத நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக தொகுதிக்குட்பட்ட சின்னசேலத்தில் ரூ1.98 கோடியில் பஸ் நிலைய விரிவாக்கம், ரூ1.5 கோடியில் எரிவாயு தகனமேடை பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ரூ.30 கோடியில் சென்டர் மீடியனுடன் கூடிய 4 வழிச்சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
இதுமட்டுமல்லாமல் ரூ.70 கோடியில் சாலை பணிகளும் நடந்துள்ளது. தற்போது தாலுகா அலுவலகம் திறப்பு, பயணியர் மாளிகை கட்டும் பணி, போக்குவரத்து பணிமனை, நீதிமன்றம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கல்வராயன்மலையில் மகளிர் பேருந்து பயண திட்டம் விரைவில் துவங்க உள்ளது. மேலும் கல்பொடை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி, மலைமக்களின் 100 ஆண்டு கனவை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. இதனால் சங்கராபுரத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
