சினிமாவில் ஷோ காட்டுனவருக்கு சி.எம் ஆசை; வரி கட்டாததை கோர்ட் கண்டுபிடித்தா அப்பீல் போறவரு நாட்ட காப்பாத்துவாரா..? டார் டாரா கிழித்தகே.பி.

கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கட்சி நிகழச்சியில் பேசியதாவது:
ஒரு நடிகர் திடீரென அரசியலுக்கு வந்து, முதல்வராக பார்க்கிறார். அவர் வெளிநாட்டில் காரை வாங்கி, வரி கட்டாமல் ஏமாற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு சென்றால், அதற்கு அவர் நீதிமன்றத்தில் அப்பீல் போகிறார். இவர் தான் நாட்டு மக்களை காப்பாற்றுபவரா?. சினிமாவில் ஷோ காட்டி விட்டு, தற்போது கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது 2ம் கட்ட தலைவராக உள்ள ஒருவர், நம்மிடம் இருந்தவர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை கட்சியில் இருந்து பொருளாதாரத்தில் உச்சம் பெற்றார். அமைச்சர், மாவட்ட செயலாளர், எம்எல்ஏ போன்ற அதிகாரம் அனைத்தையும் அனுபவித்தார். இப்போது நடிகர் கட்சிக்கு சென்றுள்ளார். அவர் கொள்கை கோட்பாட்டுக்காக அங்கு செல்லவில்லை. பதவிக்காக சென்றுள்ளார்.

அந்த கட்சியில் லாட்டரி விற்கும் கூட்டம் உள்ளது. லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தால், பணம் கொடுக்காமல் ஏமாற்றிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கையில் உள்ளது. திருமாவளவன் கட்சியில் இருந்து அவரை துரத்தி விட்டனர். திமுகவிலும் அவரை துரத்தி விட்டனர். நமது கட்சிக்கு வர பார்த்தார். ஆனால், நாம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது நடிகர் கட்சிக்கு அவர் சென்றுள்ளார். இந்த 3வது கூட்டம் தலை எடுக்கக்கூடாது. சமூகத்தில் எந்த கஷ்ட, நஷ்டங்களுக்கும் தன்னை ஆட்படுத்தி கொள்ளாமல், ஏதோ ஒரு மாயத்தோற்றத்தை வைத்துக்கொண்டு, முதல்வர் பதவிக்கு வர நடிகர் ஆசைப்படுகிறார். எம்ஜிஆரை அவருடன் ஒப்பிடக் கூடாது. ஒப்பிடுவதற்கு ஒரு தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு கே.பி.முனுசாமி பேசினார்.

‘வான்கோழி மயிலாக முடியுமா?’
தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் அளித்த பேட்டியில் ‘வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 2021 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக மீண்டும் போட்டியிடும். தவெக தலைவர் விஜய், அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணாவை மறந்துவிட்டனர் என கூறுகிறார். விஜய் அவரையே மறந்து விடுவார். மேடைக்கு மேடை மாற்றி பேசுகிறார். வான்கோழி மயிலாக முடியுமா? விஜய் வெளியில் வர மாட்டார். சினிமாவில் 10 பேரை அடிப்பார். ஆடுவார். அதனால் அவர் கால்களை பார்க்க தான் மக்கள் வருகிறார்கள். நடிகராகவே இன்றும் அவரை பார்க்கின்றனர். நடிகை கடை திறக்க வந்தாலும் கூட்டம் கூட தான் செய்யும். பிரசாரங்களிலும் நடிக்கும் அவரது அரசியல் தமிழகத்தில் எடுபடாது’ என்றார்.

Related Stories: