பிசினஸ் ஆரம்பிக்க வந்தவர் எம்ஜிஆர், ஜெ. படத்தை யூஸ் பண்ண கூடாது; சேலத்தில் இறந்தவர் குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்து ஸ்டார் ஓட்டலில் விஜய் ஆறுதல் கூறணும்: திண்டுக்கல் சீனிவாசன் நக்கல்

திண்டுக்கல் எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
விஜய் – திரிஷா பற்றி நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து வானதி சீனிவாசன் மட்டும் இல்லை. நிறைய பேர் எதிர்கருத்து சொல்லிருக்காங்க. தனிப்பட்ட விமர்சனங்கள் யாரை பற்றியும் அரசியலில் பேசக் கூடாது. என்னுடைய கருத்தும் அதுதான். நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோரை தேடி செங்கோட்டையன் ஏன் சென்றார்? இப்போ எப்படி பாஜவை செங்கோட்டையன் விமர்சிக்கலாம்? நயினார் நாகேந்திரனை மட்டம் தட்டி பேசியிருப்பதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தான்தோன்றித்தனமாக பேசக் கூடாது. வயதை தவிர, எந்த ஒருவிதத்திலும் நயினார் நாகேந்திரன், செங்கோட்டையனுக்கு குறைந்தவர் அல்ல.

அதிமுகவை விட்டு வெளியே சென்றவர்களும், தவெகவினரும் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை வைத்து கொண்டிருக்கிறார்கள். விஜய் அரசியல் பயணத்திற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு உரியவர்கள். தமிழ்நாட்டில் பிசினஸ் ஆரம்பிக்க வந்த விஜய்க்கு பொருத்தமாகாது. அவர்களை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது.

அதிமுக, திமுக வாக்கு சதவீதம் எந்த விதத்திலும் குறையவில்லை. விஜய் கையை மூடி வைத்துள்ளார். திறந்தால் கையில் ஒன்றும் இல்லை. தேர்தலில் நின்று மக்களின் அன்பை பெற்று அவர்களுக்கு என்ன ஓட்டு வந்துள்ளது என்று கூறினால் நம்பலாம். விஜய் கூட உள்ள கைத்தடிகள் 50% வாக்கு உள்ளது என்று கூட கூறலாம். பள்ளிக்கூடம் செல்லக்கூடிய மாணவர்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்டால் அஜித், விஜய், சிரிப்பு நடிகர் சூரியை கூறுவார்கள். அவர்களால் ஓட்டு போட முடியாது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் ஓட்டு போட முடியும்.

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் கொடுத்த தொகை மிகவும் குறைவானது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும். சேலத்தில் இறந்தவருக்கு பிச்சைக்காசு ரூ.5 லட்சம் கொடுத்து இருக்கிறார் என்று சொன்னால் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். கரூரில் உயிரிழந்தவர்களுக்கு என்ன தொகை கொடுக்கப்பட்டதோ அதே தொகை கொடுக்க வேண்டும். சென்னைக்கு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து பேசி குடும்பத்தினருக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். தனது கட்சியினரை வெயிலில் காக்க வைப்பது ஏன்? தனது கட்சி தொண்டர்கள் இறந்தால் ஒருவேளை விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். இவ்வாறு கூறினார்.

மோடிய நினைச்சு ஓட்டு போடாம இருக்காதீங்க… சொன்னது சரிதான்
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘திண்டுக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்றேன். அப்போது அப்போ அங்க இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு உதவி பேராசிரியர், என் பேரை சொல்லி, நீங்க எங்க கல்லூரிக்கு ரோடு போட்டு கொடுத்தீங்க… ரொம்ப நன்றினு சொன்னாரு. அதற்கு தான் உங்க ஊர்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லி நாங்க மோடியின் பிஜேபியுடன் கூட்டணி இருக்கறதுனால எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லிட போறாங்க, அவங்களையும் சேர்த்து ஓட்டு போட சொல்லுங்கம்மான்னு சொன்னேன். பொதுவாக இருக்கும் நிலையை கூறினேன்’’ என்றார்.

பாம்பின் கால் பாம்பு அறியும்
ஓபிஎஸ், தேமுதிக இன்னும் முடிவு அறிவிக்காமல் இருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஓபிஎஸ்க்கு உடல்நிலை எதுவும் சரியில்லையா? இது அரசியல்ரீதியான கேள்வியா? இதற்கு டிடிவி.தினகரன் கூறிய பதில் சரியாக இருக்கும். பாம்பின் கால் பாம்பு அறியும். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பிரேமலதாவுடன்தான் பேசி கொண்டிருக்கிறார் என்று கூறினேன், தவிர நயினார் நாகேந்திரன் கூறினார் என நான் சொல்லவில்லை. அவரிடம் தான் கேட்க வேண்டும். தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் வந்து விடுவார்கள்’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

முதல்ல குழந்தை பிறக்கட்டும்…
‘‘சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்று கூறுகிறீர்கள். இது அனைத்து செய்திகளிலும் வர வேண்டும். குழந்தை பிறக்கட்டும். அப்புறம் ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பார்த்து விட்டு பெயர் வைப்போம். அதுவரை நோ கமெண்ட்ஸ்’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Related Stories: