சிட்னி: ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நேற்று இந்திய மகளிர் அணி 21 ரன் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸி மகளிர் அணியுடன், சிட்னியில் நேற்று முதல் டி20 போட்டியில் மோதியது. முதலில் ஆடிய ஆஸி மகளிர் அணி துவக்க வீராங்கனைகள் பெத் மூனி 5, ஜார்ஜியா வால் 18 ரன்னில் அவுட்டாகினர். பின் வந்தோரில் போப் லிட்ச்பீல்ட் 26, ஜார்ஜியா வாரெம் 30 ரன் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், 18 ஓவரில் ஆஸி, 133 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அருந்ததி ரெட்டி 4 விக்கெட் வீழ்த்தினார்.
அதையடுத்து களமிறங்கிய இந்திய அணி துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா, 11 பந்துகளில் 21 ரன் குவித்து அவுட்டானார். மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (16 ரன்), பின் வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் (9 ரன்) சேர்ந்து அணியின் ஸ்கோரை 5.1 ஓவரில் 50 ஆக உயர்த்தியபோது மழை குறுக்கிட்டது. அதன் பின் மழை ஓயாததால், டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
