சென்னை: கலைஞர் உருவாக்கிய கூட்டணி, நம்பகமான கூட்டாளி என்றும், காங்கிரஸ் பெயரால் பாசிச சக்திகளுக்கு இடமளிக்கும் வகையில் சிலர் பேசுவது பொருட்படுத்த தக்கது அல்ல என்றும் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் இலக்கியா நடராஜன் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், கவிஞருமான இலக்கியா நடராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் 75 ஆண்டு கால வரலாறு என்பது, இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாதது. தனித்துவமானது. தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த சிந்தனை மாற்றங்களில் திமுக அழுத்தமாக தாக்கத்தினைக் கொண்டுள்ளது. மாநில கட்சியாக தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தேசிய அளவில் உருவாக்கிய தாக்கங்கள் திமுக செலுத்திய அளவில்லாதது.
இன்றைக்கு இந்தியா கூட்டணி என இந்திய ஜனநாயக இயக்கத்தை பாதுகாப்பதற்கான கூட்டாளியாக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து பயணிப்பது வரை திமுக- காங்கிரஸ் பேரியக்கமும் நம்பகமான கூட்டாளிகள் என்றால் மிகையில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு என்பதில் இருந்து தான், திமுக தொடக்கக் கால அரசியல் வரலாற்றை எழுத முடியும். அன்றைக்கு இருந்த காலச் சூழலில், எந்த அரசியல் கட்சியும் காங்கிரஸ் எதிர்ப்பில் இருந்துதான் மக்களை கவர முடியும். அது தவிர்க்க முடியாதது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அன்றைய முக்கிய தலைவர்களான ராஜகோபாலாச்சாரியார், ஓமந்தூர் ராமசாமி, பெருந்தலைவர் காமராஜர், பக்தவச்சலம் என எல்லோருக்கு எதிராகவும் அரசியல் களத்தில் அணி திரண்ட இயக்கம் திமுக, அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, அதேநேரத்தில் தலைவர்களோடு நல்ல நட்பும், தோழமையும் கொண்டிருந்தனர் என்பது வரலாறு. அந்த கட்சியின் தலைவர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கலைஞர் போன்றோர் காங்கிரஸ் தலைவர்களோடு நல்ல நட்பு பாராட்டியவர்கள், வழிகாட்டுதல்களைப் பெற்றவர்கள்.
திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த கட்சியாக மாறிய போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையோடும் நெருக்கமான தோழமை பூர்வமான கட்சியாக செயல்பட்டுள்ளது. இன்றும் அந்த நட்பு உறவும் பேணிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அரசியல் அமைப்பு, ஜனநாயகம் வலுப்பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்ட இயக்கம் திமுக. அன்னை இந்திரா குறிப்பிட்டதுபோல கலைஞரை நம்பலாம். இந்திராகாந்திக்கு பின்னர், ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் என அனைவரோடும் அரசியல் தாண்டி தோழமை கொண்டுள்ளது திமுக.
தேர்தல் கணக்குகளில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் போடும் கணக்கு சரியாகவே இருந்திருக்கிறது. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2004ம் ஆண்டு தொடங்கிய தேர்தல் நட்பு, 2025 வரை நீள்வது ஆச்சர்யமானது என கவனிக்கப்படுகிறது. அது இன்னும் பல தேர்தல்களுக்கும் நீடிக்க வேண்டும். தேசிய அரசியலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, தொலைநோக்குச் சிற்பியாகத் திகழ்ந்த கலைஞர் உருவாக்கிய கூட்டணியாக காங்கிரஸ் உடனான நட்பு உள்ளது. இந்தியாவின் மிகச் சிறந்த ராஜதந்திரியான கலைஞர், திமுக காங்கிரஸ் நட்பை சாதாரணமாக உருவாக்கவில்லை.
இந்தியாவின் பன்முகத் தன்மையை காக்கும். தேசிய தலைமையாக காங்கிரஸ் இருக்கும் என்பதே அவர் உருவாக்கியதன் நோக்கம். இன்றைய தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினும், கலைஞரைப் போலவே அரசியல் சாதுர்யம் மிக்கவர். இந்தியா கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். காங்கிரஸ் கட்சியுடன் உறுதியான தோழமையாக சோனியா காந்தி, ராகுல் காந்தியுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருக்கிறார். காங்கிரஸ் பேரியக்கமும் திமுகவும் ஒருமித்த குரலில் நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்னைகளை கவனப்படுதுகின்றன.
முதல்வராக அவரது பணிகள் ஆக்கபூர்வமானது. எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றவல்லவை. பொருளாதார அறிஞர்களின் ஆலோசனைகளை கேட்டு ஆட்சி நடத்துவது அரிதிலும் அரிது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி, இந்திய அளவில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்தி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நேரத்தில், காங்கிரஸ் பேரியகத்தின் பெயரால் பாசிச சக்திகளுக்கு இடமளிக்கும் வகையில் சிலர் பேசுவது பொருட்படுத்த தக்கது அல்ல என்பதே என் கருத்து. மக்களின் நலன் சார்ந்து கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரே குரலாக ஒலித்து வருகிறது திமுக. அந்தக் குரல் 2026 தேர்தலிலும் சேர்ந்த ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
