நீதிபதிக்கு கொடுக்க ரூ.50 லட்சம் வாங்கினாரா? மூத்த வழக்கறிஞர் மீதான குற்றச்சாட்டு குறித்து விஜிலென்ஸ் விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தங்க வர்த்தகத்தில் ரூ.89 கோடி மோசடி தொடர்பான வழக்கில் சாதகமான உத்தரவைப் பெற நீதிபதிக்கு கொடுப்பதற்கு எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் 50 லட்சம் ரூபாய் பெற்றதாக வந்த கடிதம் குறித்து விசாரணை நடத்த விஜிலென்ஸ் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்க வர்த்தகத்தில் ரூ.89 கோடியே 90 லட்சம் மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நரேஷ் பிரசாத் அகர்வால் என்பவரும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கணேஷ் அகர்வால் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில், மனுதாரர்களுக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஒருவர், சாதகமான உத்தரவைப் பெறுவதற்கு நீதிபதிக்கு கொடுக்க வேண்டும் என கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் 50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகக் கூறி நீதிபதி நிர்மல்குமார், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சிபிஐ ஆகியோருக்கு நீதிக்கான அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் என்ற சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞரை அழைத்து நீதிபதி நிர்மல் குமார் விசாரித்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மூத்த வழக்கறிஞர், எந்த விசாரணைக்கும் தான் தயாராக இருப்பதாக கூறினார். சிபிஐ சிறப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கண்ணியத்தை பாதிக்கும் இந்த கடிதத்தை புறந்தள்ள வேண்டும். கடிதத்தை அனுப்பிய தனிநபரை கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, இதுதொடர்பாக விஜிலென்ஸ் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், வழக்கு விசாரணையில் இருந்து விலகினார்.

Related Stories: