சென்னை: சென்னை கொடுங்கையூரில் கடந்த 2023ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் குறித்தும் நடிகையும், பாஜ நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அவருடைய இந்த பேச்சு இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, கொடுக்கப்பட்ட புகார் மீது கொடுங்கையூர் போலீசார் அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் 10வது மாஜிஸ்திரேட் ரேவதி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
