மைவாடி மாரியம்மன் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு

 

 

சென்னை: மைவாடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை விரைவுப்படுத்தி விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா – விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம். மான்ராஜ், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன்: மடத்துக்குளம் தொகுதி, சோழமாதேவி குங்குமவள்ளியம்மன் உடனுறை குலசேகரசாமி திருக்கோயிலுக்கு தரைத்தளம் அமைத்து, சுற்றுச்சுவர் கட்ட அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் : உறுப்பினர் கோரி இருக்கின்ற குங்குமவள்ளி குலசேகரசாமி கோயிலுக்கு 24 லட்சம் ரூபாய் செலவில் ஏற்கனவே தரைத்தளம் அமைக்கின்ற பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது. 25 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணியானது தரைதளம் அமைக்கும் பணி நிறைவுற்ற பிறகு தான் மேற்கொள்ளப்படும். தரைதளம் அமைக்கின்ற பணி 50 சதவிதம் முடிவுற்று இருக்கின்றது. அந்த பணி நிறைவுற்றபின், சுற்றுச்சுவர் அமைக்கின்ற பணி தொடங்கும் என்று கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன்: அமைச்சர் கூறியதுபோல, மடத்துக்குளம் வட்டம் சோழமாதேவி அருள்மிகு குங்குமவள்ளி குலசேகர சுவாமி திருக்கோயில் பணிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது நிதி பற்றாக்குறை உள்ளதால் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி தருமாறு அன்போடு கேட்டுக் கொண்டு, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாற்று சிறப்புமிக்க மும்மூர்த்திகள் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு புனரமைப்பு பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தவும் மற்றும் திருக்கோயிலில் அன்னதானம் 50 பேருக்கு வழங்கப்படுகிறது அதனை நூறு நபர்களுக்கு வழங்கிட இந்த அரசு ஆவன செய்யுமா என்பதை தங்கள் வாயிலாக கேட்டு அமர்கிறேன்.

அமைச்சர்: உறுப்பினர் கோரியிருந்த அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு 2016 ஆம் ஆண்டு தான் குடமுழுக்கு நடந்திருக்கின்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றாலும் கூட அந்த கோயிலில் சிறு சிறு பகுதிகள் சேதமடைந்து இருப்பதை கணக்கில் கொண்டு திருப்பணிகள் தொடங்குவதற்குண்டான பணிகள் தொடங்கி இருக்கின்றோம். அந்த திருக்கோயிலில் 50 நபர்களுக்கென்று தொடங்கப்பட்ட அன்னதானம் 100 நபர்களுக்கு என்று மாற்றப்பட்டு திருவிழா காலங்களில் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. உங்கள் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து மார்ச் 1 தமிழகத்தின் இதய நாளிலிருந்து 150 நபர்களுக்கு அன்னதானம் தொடங்கப்படும். அன்னதானத் திட்டத்திலே இந்த ஆட்சி மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறது. கடந்த காலங்களில் 2 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் இருந்தது.

முதலமைச்சர் பொற்கால ஆட்சி ஏற்பட்ட பிறகு அதை மேலும் 12 கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 14 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அன்னதானத் திட்டம் மேலும் 23 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத் திட்டத்தால் ஆண்டொன்றுக்கு பயன்பெறுகின்ற இறையன்பர்களின் எண்ணிக்கை 3.50 கோடியாகும். இதற்கு ஆகின்ற செலவு ஆண்டிற்கு ரூ. 120 கோடியாகும். திருவிழா காலங்களில் நெல்லையப்பர் திருக்கோயில் உட்பட 27 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு 20 நாட்கள் 4 லட்சம் பக்தர்களுக்கும், வடலூரில் தைப்பூசத்தை முன்னிட்டு நாளொன்றுக்கு 10,000 பக்தர்கள் வீதம் 3 நாட்களுக்கு 30,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, அன்னதானப் பிரபுவாக இந்த ஆட்சியும், முதல்வரும் காட்சியளிக்கின்றார் என்று கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன்: மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மைவாடி மாரியம்மன் திருக்கோயிலில் உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நிதி பற்றாகுறையால் பணிகள் தொய்வடைந்துள்ளது. அதற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறும், உடுமலைப்பேட்டை, அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோயில் மிக முக்கியமாக கோயிலாகும். அதற்கு குடமுழுக்கு நடத்தவும், அதேபோல மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட, ஆத்தோரம் வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதியினை ஒதுக்கி விரைவில் கும்பாபிஷேகம் செய்து கொடுக்கவும் காரத்தொழுவு அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில் புகழ்பெற்ற கோயிலாகும். அந்த கோயிலுக்கு வெளிப்புற சுற்றுச்சுவர் கட்டித்தர கூடுதல் நிதியை ஒதுக்கி செய்து கொடுக்கவும் அமைச்சர் ஆவன செய்ய முன் வருவாரா என கேட்டு அமருகிறேன்.

அமைச்சர் : உறுப்பினர் கோரிய மாரியம்மன் திருக்கோயில், பிரசன்ன விநாயகர் திருக்கோயில், அழகுநாச்சியம்மன் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களுக்கும் நிதியை ஒதுக்கி ஏற்கனவே நடைபெற்று வரும் திருப்பணிகளை விரைவுப்படுத்தி விரைவில் குடமுழுக்கு நடைபெறும். குடமுழுக்கை பொறுத்தளவில் உறுப்பினர் நடைபெறுமா, நடைபெறுமா என கேள்வி எழுப்பினார். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் நடைபெற்றுள்ள குடமுழுக்குகளின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் இந்து சமய அறநிலையத்துறை உருவாகிய காலம் என்றாலும், முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷமான திருக்கோயில்கள் என்றாலும் இந்த ஐந்தாண்டு ஆட்சியில் தான் 4,192 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கை கண்டுயிருக்கின்றோம்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த மாதத்தில் மட்டும் கூடுதலாக நடைபெறவுள்ள திருக்கோயில்களின் எண்ணிக்கை இதுவரையில் நாங்கள் அனுமதி அளித்திருப்பது 130 திருக்கோயில்களாகும். அதையும் சேர்த்து கணக்கிட்டால் இந்த மாத இறுதிக்குள் 4,322 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொண்டு, மக்களோடு இறைவனையும், இறைவியையும் மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டிருக்கின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத் குமார்: வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்குன்றம் கிராமத்தில் தவளகிரி நாதர் மலைக்கோயில் உள்ளது. அந்த மலைக் கோயிலை சுற்றி வந்தவாசி சுற்று வட்டார மக்கள் மட்டும் அல்ல செய்யாறு தொகுதியை சேர்ந்த கிராம மக்களும் கிரிவலப் பாதையில் செல்கிறார்கள். அந்த கிரிவலப் பாதையில் மின்விளக்குகளும் அதுமட்டுமல்ல அந்த ஜங்ஷன் சந்திப்பு பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைத்து பௌர்ணமி அன்று கிரிவலப் பாதையில் செல்கின்ற மக்களுக்கு ஒரு சிறப்பு அன்னதானமும் வழங்க அறநிலையத்துறை அமைச்சர் கனிவோடு பரிவசித்து அதை செய்து தர முன்வருவாரா என்று தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

அமைச்சர்: உறுப்பினர் கோரிய கிரிவலப் பாதையை உடனடியாக இணை ஆணையாளரை ஆய்வு செய்ய சொல்லி அதற்குண்டான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு சென்று, அடுத்த ஆண்டு இதே நேரத்தில் இதே சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டு இதே முதல்வர் முன்னிலையில் அந்த கேள்வியை கேட்கின்ற பொழுது அந்த பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்று கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் இ.எம். மான்ராஜ் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் ஆனது நீண்ட காலமாக தூர்வாரி பராமரிக்கப்படாமல் உள்ளது. அப்பகுதியில் குளிக்கும் பொதுமக்கள் உயிர் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருக்குளத்தை தூர்வாரி பராமரிப்பு செய்ய அரசு ஆவன செய்யுமா தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன்.

அமைச்சர் : உறுப்பினர் கோரிய தெப்பக்குளமானது மழைக்கால பெருவெள்ளத்தால் நீர்நிலை உயர்ந்த காரணத்தால் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. உடனடியாக திருப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடன் இணை ஆணையரை கேட்டுக் கொண்டு எவ்வளவு துரிதப்படுத்த முடியுமோ அவ்வளவு துரிதப்படுத்தி நிச்சயம் அவர் கோரிக்கையை நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவியநல்லூர் சாட்சிநாதர் திருக்கோயிலுக்கு, அதேபோல குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயிலுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து குடமுழுக்கு விரைவில் முடித்து தருவதற்கு கேட்டு அமருகிறேன்.

அமைச்சர்: உறுப்பினர் கோரிய அந்த இரண்டு திருக்கோயிகளின் நிலையை உடனடியாக இணை ஆணையர் அவர்களிடம் அறிந்து, கூடுதல் நிதி தேவைப்பட்டு அதற்குரிய கருத்துரு பெறப்பட்டிருந்தால் உடனடியாக ஆணையர் பொது நல நிதியிலிருந்து நிதி விடுவித்து தரப்படும் என்று கூறினார்

Related Stories: