தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை முன்நின்று வழிநடத்த வேண்டும் – ராகுல் காந்தியிடம் பேசிய மு.க.ஸ்டாலின்

சென்னை: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை ராகுல் காந்தி வழிநடத்த வேண்டும் என முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக எம்.பி-க்கள் முழு ஆதரவை வழங்குவார்கள் என்று உறுதிபட கூறி இருக்கிறார். தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க உங்களுடன் திமுக எம்.பி-க்கள் அனைவரும் துணை நிற்பார்கள் என்று ராகுலிடம், முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 430 உறுப்பினர்கள் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்த நிலையில், மசோதாக்களை தாக்கல் செய்யலாம் என 275 பேரும் எதிர்த்து 185 பேரும் வாக்களித்திருந்தனர்.

இதனிடையே தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் கருப்புக்கொடி ஏற்றியும், தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழகம் பாதிக்கப்பட்டால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

Related Stories: