ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாங்க… அதிமுக கூட்டங்களில் பணப்பட்டுவாடா ஜோர்… ஜோர்…

அதிமுக கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வரும் கலாச்சாரத்தை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அதிமுகவினர் ஆரம்பித்து விட்டனர். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி 2 ஆயிரம் கோடிக்கு மேல் வழங்கவில்லை. இந்நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என்ற திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரையும் ஒன்றிய அரசு நீக்கி விட்டது. அது மட்டுமல்லாது 100 நாள் வேலையை 125 நாளாக உயர்த்தி விட்டோம் என கூறி விட்டு அதற்கான நிதியை குறைத்து மாநில அரசுகள் தலையில் ஒன்றிய அரசு சுமையை ஏற்றியுள்ளது. இதனால் ஏற்கெனவே நிதி பற்றாக்குறையால் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

ஆனால், பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக, ஒன்றிய அரசின் அட்டூழியத்தை கண்டு கொள்ளாமல், ஏதோ தமிழக அரசுதான் 100 நாள் வேலை திட்டத்துக்கு கூலி வழங்கவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியது. நெல்லை அருகே மானூரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் சேர்ப்பதற்காக மூதாட்டிகளை அழைத்து வந்தனர். அவர்களோ நிற்க முடியாமலும், வெயில் கொடுமையாலும் தவித்தனர். சீக்கிரம் ரூபாயை கொடுங்க, மதியம் வீட்டுக்கு போய் சமைத்தால் தான் சாப்பிட முடியும் என மூதாட்டிகள் அங்கலாய்த்தனர். ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் அழைத்து வந்த பெண்களின் பெயர்களை நோட்டில் எழுதி கணக்கு வைத்துக்கொண்டு, அவர்களுக்கு 200 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டது.

திருப்பூர்
திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் தெருமுனை பிரசார இயக்கங்கள் நடத்தப்பட்டு வருன்றன. இந்தக் கூட்டங்களுக்கு பேச்சாளர்களைத் தவிர வேறு யாரும் வருவதில்லை. தெருவில் போவோர் வருவோர்கூட நின்று பார்த்துவிட்டு போவதில்லை. அதனால், தெருமுனை கூட்டத்துக்கும் வேறு பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு டிஎஸ்ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை பிரசார இயக்கங்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். தெருமுனை கூட்டம் முடிந்த பிறகு அவர்களை வரிசையில் நிற்கவைத்து ஏற்கனவே பெயர் எழுதி வைக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.200 முதல் ரூ.500 வரை அதிமுக நிர்வாகிகள் பட்டுவாடா செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: