பிரசாரத்தில் ஈடுபடாத சுயேட்சை வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பு

வேலூர், ஏப்.16: வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் உள்ளனர். ஆனால் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மட்டுமே பங்கேற்கின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடக்கிறது. கடந்த மார்ச் மாதம் 30ம்தேதி முதல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. 7ம்தேதி மனுக்கள் பரிசீலனை நடந்தது. 9ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் 21ம்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 65 பேர் போட்டியிடுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆற்காடு, சோளிங்கர் ஆகிய 4 தொகுதிகளில் 65 பேர் போட்டியிடுகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 74 பேர் களத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யாறு, கலசப்பாக்கம், செங்கம், கீழ்பொன்னாத்தூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 156 பேர் போட்டியிடுகின்றனர். இம்மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், தலைவர்கள் பிரச்சாரம், வாகன பிரச்சாரம் உள்ளிட்டவை நடந்து வருகிறது. ஆனால் ஒரு சில சுயேட்சை வேட்பாளர்களை தவிர மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எந்தவித பிரச்சாரத்திலும் ஈடுபடுவதை காண முடியவில்லை. அனைத்து ஊர்களிலும் வாக்காளர்களிடம் குறைந்தபட்சம் துண்டு பிரசுரம் கொடுக்கும் பணியில் கூட ஈடுபடவில்லை.

வேட்புமனு தாக்கல் செய்தது, சின்னம் ஒதுக்கீடு கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சார்பில் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டங்களில் மட்டுமே இவர்களை காண முடிகிறது. வேறு எவ்வித தேர்தல் தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதில்லை. தேர்தலில் மக்களை சந்திக்காமல் வேட்பாளராக போட்டியிடுவதற்கு என்ன காரணம் என வாக்காளர்கள் குழம்பி வருகின்றனர். வேட்பாளராக போட்டியிட்டால் பூத் ஏஜெண்டாக நம் சார்பில் ஒருவர் இருக்கலாம். எனவே கட்சி வேட்பாளர்களே தங்களுடைய ஆட்களை வாக்குச்சாவடிகளில் இருக்க வைக்க இதுபோல் சுயேட்சை வேட்பாளர்களை நிற்க வைக்கின்றனர் என்று கூறுகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதால் இதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளவே வேட்பு மனு தாக்கல் செய்ததாக மற்றொரு வேட்பாளர் கூறினார்.

Related Stories: