சிவாலயத்தில் சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு நான்கு காலங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவதை யாவரும் அறிேவாம். ஆனால், மதுரையிலிருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில் உள்ள திருவேங்கடம் திருத்தலத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஏடகநாதசுவாமி கோயிலில் அன்று, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும்பொழுது, நான்காம் ஜாமப் பூஜையின்போது ஸ்ரீபைரவருக்கும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும்.
இதுபோல் வேறு எந்தக் கோயிலிலும் தமிழகத்தில் நடைபெறுவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், புனிதத் தலமான கங்கை நதி ஓடும் காசியில் மட்டும் பைரவருக்கு சிவராத்திரியில் அபிஷேகம் நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, ஸ்ரீபைரவரை தரிசித்தால் ‘அஸ்வ மேத யாகம் செய்த பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
சிவராத்திரியில் அன்னப் பிரசாதம்
ஐப்பசி பெளர்ணமியில் சிவபெருமானுக்கு (லிங்கம்) அன்னாபிஷேகம் நடைெபறும். அதேபோல் சிவராத்திரி அன்று அவரது அம்சமாக விளங்கும். வீரபத்திரருக்கு அன்னப்படையல் நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஊர் ‘ராயகோட்டி’. இங்கு அமைந்துள்ள ராஜ நாயுடு எனும் ஸ்ரீவீரபத்திரர் கோயிலில் சிவராத்திரியன்று ஸ்ரீவீரபத்திரர் சந்நதி எதிரில் 365 படி அரிசியை சாதமாக சமைத்து படைப்பார்கள். அத்துடன் அதிரசம், கிழங்கு வகைகள், பூசணிக்காய் ஆகியவற்றையும் மலைபோல் குவித்து, ஸ்ரீவீரபத்திரரிடம் உள்ள கத்தியால் அன்னத்தைக் கிளறி, சிதறடித்து வழிபாடுகள் நடைபெறும். இந்த அன்னம் பிறகு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தை உண்டால் வாழ்நாள் முழுவதும் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி விரதம்
சிவராத்திரி அன்று விரதம் மேற்கொண்டு, அன்று சிவாலயத்தில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்து கொண்டால் முக்தி கிடைக்கும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. மேலும், அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும். தெரிந்தோ தெரியாமல் செய்த பாவங்கள் தீரும். நினைத்த காரியம் நிறைவேறும். சிவராத்திரி விரதம் இருந்துதான் பிரம்மா, சரஸ்வதி தேவியை மனைவியாகப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியையும் அடைந்தார். மகாவிஷ்ணு இந்த விரதம் மேற்கொண்டு சக்கராயுதம் பெற்றதுடன், மகாலட்சுமியையும்; உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின் கரையில் மகேஸ்வரம் சிவபார்வதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் புதிதாக ஒரே கல்லில் செய்யப்பட்ட 111 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த சிவலிங்கத்தை வடிவமைக்கும் பணி தொடங்கி நிறைவடைந்து உள்ளது. இதன்மூலம் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என்ற சிறப்பு கிடைத்து உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோடி லிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள 108 அடி உயர சிவலிங்கம்தான் உலகத்திலேயே பெரிய சிவலிங்கமாக இதுவரை இருந்தது.
இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழா. இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழாவிற்கு இந்திரப் பெருவிழா என்று பெயர். திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத அகோரமூர்த்தி ஆலயத்தில் இவ்விழா மாசி மாத வளர்பிறையில் நடக்கிறது. இதை இந்திரனே நடத்தி வைப்பதாக ஐதீகம். இவ்விழாவில் சுவாமி காவிரி சங்கமத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். இதுவன்றி வாரம்தோறும் ஞாயிறன்று அகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஐந்து முகம் கொண்ட பஞ்சமூர்த்தியாக அகோர சிவன் காட்சி தருகிறார். சோழர் காலத்தில் ஐம்பொன் விக்ரகங்களை உருவாக்கும் தொழிற்கூடமாக இது இருந்துள்ளது. சீர்காழியிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
ஜெயசெல்வி
