ஆம் ஆத்மி எம்எல்ஏ புகாரால் பரபரப்பு; பஞ்சாப்பில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பாஜக?.. அரியானா முதல்வர் மீது பகீர் குற்றச்சாட்டு

 

 

சண்டிகர்: பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்ததாக எழுந்துள்ள புகார் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 25 கோடி ரூபாய் வரை பாஜக பேரம் பேசியதாக எழுந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது தங்கள் ஆட்சியைக் கலைக்க முயற்சி நடப்பதாகக் கூறி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி நம்பிக்கை தீர்மானத்தைக் கொண்டு வந்து தனது பலத்தை நிரூபித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய சங்க்ரூர் தொகுதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் நரிந்தர் கவுர் பாரஜ், ‘அரியானா முதல் அமைச்சர் நயப் சிங் சைனி என்னை நேரில் தொடர்பு கொண்டு பேசினார்.

வரும் 2027ம் ஆண்டு நடக்கும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் சங்க்ரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருகிறோம். எனது மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தனிப்பட்ட முறையில் சந்திக்கவும் என்று அவர் அழைப்பு விடுத்தார்’ எனப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி, ‘புகார் கூறிய அந்த பெண் யார் என்றே எனக்குத் தெரியாது, அவரை நான் சந்தித்ததும் இல்லை. பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய ஆம் ஆத்மி அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பவே இத்தகைய பொய்களைப் பரப்புகிறது’ என பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த குற்றச்சாட்டு குறித்து இரு மாநில அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

Related Stories: