புனேவில் பல்கலைக்கழக உணவு திருவிழாவில் வங்கதேச அரங்கம் சூறை: பாஜ இளைஞரணியினர் அட்டகாசம்

புனே: புனேவில் நடந்த பல்கலைக்கழக உணவு திருவிழாவில் வங்கதேச அரங்கத்தை பாஜ இளைஞரணியினர் சூறையாடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டி வளாகத்தில் சர்வதேச உணவு திருவிழா நேற்று நடந்தது. பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் உணவுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த திருவிழா நடந்தது. வங்கதேச மாணவர்களும் உணவு அரங்கம் அமைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த அரங்கத்தின் மீது பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. அரங்கில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வங்கதேச தேசிய கொடியைப் பறித்து தீ வைத்ததுடன், ஆக்ரோஷமான முழக்கங்களையும் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வங்கதேச மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கணேஷ் போகாலே கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநபர்கள் என்றும், அவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து புனே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: