×

தமிழகத்தில் பறவைக்காய்ச்சலால் எந்தவித பாதிப்பும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ.8 கோடி மதிப்பீட்டிலான புதிய கேத்லேப் கருவியினை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கொண்டு வந்தார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 7வது புதிய கேத்லேப் சென்னை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மட்டுமே இதுவரை 7 கேத்லேப் புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மிக விரைவில் கடலூர், நீலகிரி, திருவள்ளுர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் ஆகிய 5 இடங்களில் புதிய கேத்லேப் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கேத்லேப் கருவியின் பயன் என்பது மாரடைப்பு சிகிச்சையில் மிக எளிதான பணியினை இந்த கருவி செய்து வருகிறது. மாரடைப்பு ஏற்பட்ட மருத்துவ பயனாளிகளில் கேத்லேப் மூலம் அடைப்புகளை உடனடியாக அகற்றி இரத்த ஓட்டத்தை சீராக்க இது உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இருதய பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதயநாள அடைப்புகளை அகற்றுவதற்கு இக்கருவி பயன்பெறுகிறது. மேலும் இருதய துடிப்பு குறைபாடுகளுக்கான கருவி சிகிச்சை வழங்குவதற்கு கேத்லேப் பயன்படுகிறது.

பறவைக் காய்ச்சல் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றவுடன் மாநில சுகாதாரத்துறை காகங்களோ அல்லது கோழி போன்ற பறவைகளோ திடீரென்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனால் அதனை கண்டவர்கள் உடனடியாக ஆழமான குழியில் புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். கோழி போன்றவை திடீரென்று இறந்து போனால் இறந்த கோழியினை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தலும் விடுவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கோழி இறைச்சியை உண்பவர்கள் நன்றாக சமைத்த உணவினையே உண்ண வேண்டும். பாதி வேக வைத்த இறைச்சியை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் இந்த அறிவுறுத்தல்களை மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். கோழி போன்றவை திடீரென்று இறந்து போனால் இறந்த கோழியினை யாரும் சாப்பிட வேண்டாம்.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Chennai ,Tamil Nadu Government Multispeciality Hospital ,Omandurar Government Estate, Chennai ,
× RELATED தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு