- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கொளத்தூர்
- சென்னை
- கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகம்
- சட்டசபை
- சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்
- சிவா இளங்கோ சாலை, ஜவஹர் நகர்...
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கொளத்தூர் துணை கமிஷனர் அலுவலகம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.11.37 கோடி செலவில் கட்டப்பட்ட கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த கட்டிடம் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 29,514 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் வரவேற்பு கூடம், மின் தூக்கி வசதிகள், 15 இருசக்கரம் மற்றும் 14 நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் தளத்தில் – சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், வரவேற்பு கூடம், காவல் ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை, ஆண்/பெண் கைதிகள் அறை, கணினி அறை, ஆவணங்கள் வைப்பு அறை, ஆயுதக் கிடங்கு அறை, நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் துணை ஆணையர் அலுவலகம், வரவேற்பு கூடம், ஓய்வறையுடன் கூடிய துணை ஆணையர் அறை, துணை ஆணையரின் உதவியாளர்கள் அறை, கூட்டரங்கம், உணவு அறை. ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மூன்றாம் தளத்தில் போக்குவரத்து காவல் நிலையம், வரவேற்பு கூடம், போக்குவரத்து ஆய்வாளர் அறை, போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை, பொழுதுபோக்கு கூடம், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான ஓய்வறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நான்காம் தளத்தில் கொளத்தூர் சரக காவல் உதவி ஆணையர் அலுவலகம், மாவட்ட சைபர் குற்றப் பிரிவு வரவேற்பு கூடம், உதவி ஆணையர் அறை, குற்றப்பிரிவு ஆய்வாளர் அறை, நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் அறை, தீவிர குற்றவாளிகள் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் அறை, இணைய வழி குற்றப் பிரிவு அறை, குற்றப் பிரிவு விசாரணை அறை, தலைமை காவலர், எழுத்தர் மற்றும் காவலர் அறை, கைதிகள் அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான நவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் ரூ.2.82 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள எச்2எஸ் வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய ஐஓடி மூலம் செயல்படுத்தப்பட்ட தானியங்கி கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கொளத்தூர் ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் பெருநகர சென்னை மாநகரட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.3.45 கோடியில் 5 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நடைபாதை, இறகுப்பந்து விளையாட்டுத்திடல், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள புதிய நீருறிஞ்சி பூங்காவிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
