×

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு? அதிமுக தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்ட அனுமதியளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக அதிமுக நிர்வாகியும், அறப்போர் இயக்கமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஷ்நேவ் சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சதுப்பு நிலத்தை துல்லியமாக வரையறை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.

அப்போது, ஈரநில ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு பிப்ரவரி 24ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள போது, உயர்நீதிமன்றத்தில் இணையான விசாரணை நடத்த முடியாது. மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி, அதிமுக நிர்வாகியும், அறப்போர் இயக்கமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பு வளாக கட்டும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது.

Tags : Pallikaranai ,AIADMK ,Chennai ,Madras High Court ,Supreme Court ,Pallikaranai swamp ,Arapor Movement ,Pallikaranai swamp… ,
× RELATED தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு