100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரியம் பழநிக்கு மாட்டுவண்டியில் சென்று பொள்ளாச்சி பக்தர்கள் வழிபாடு

பொள்ளாச்சி : பழநி மலைக்கோயிலுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் மாட்டுவண்டிகளில் சென்று வழிபாடு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம்.

இவ்விழா இந்த ஆண்டு கடந்த ஜன. 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பிப். 4ம் தேதியுடன் நிறைவடைந்தது. இவ்விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருவது வழக்கம். இவர்களில் காரைக்குடி நகரத்தார், நாட்டார், சேலம் மாவட்ட எடப்பாடி குழுவினர் பிரசித்தி பெற்றவர்கள் ஆவர். இதுபோல் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி பக்தர்களின் வருகையும் பிரசித்தி பெற்றதாக இருக்கும்.

இக்குழுவினர் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழநி மலைக்கோயிலுக்கு செல்கின்றனர்.மாட்டுவண்டிகளில் செல்லும் இக்குழுவினர் நேற்று பழநி சென்றடைந்தனர். சண்முக நதி ஆற்றில் நீராடிய பின்பு, மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இன்று மீண்டும் ஊர் திரும்புகின்றனர். 35க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் இக்குழுவினர் குடும்பத்துடன் பழநி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Related Stories: